அரசாங்கத்துக்கு உறுதியான பொருளாதார கொள்கை இருக்கின்றது. ஆர்ப்பாட்டங்கள் செய்வதன் மூலம் அதனை மாற்றிக்கொள்ள முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

அரசாங்கம் உறுதியான பொருளாதார கொள்கையுடனேயே அதிகாரத்துக்கு வந்தது. வற் வரி தொடர்பில் அரசாங்கம் நிலையான கொள்கையுடன்தான் அதிகரிப்பு செய்தது. ஏனெனில் கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டிருந்த கடன் மற்றும் வட்டி வீதத்தை அடைப்பதற்கு அரசாங்கத்தின் வருமானம் போதுமானதாக இருக்கவில்லை. அதனால்தான் வற்வரியில் திருத்தம் கொண்டுவந்தோம்.

என்றாலும் தற்போது நீதிமன்றம் விதித்திருக்கும் இடைக்கால தடை உத்தரவை மதித்து பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அதில் பல திருத்தங்களை மேற்கொள்தற்கு பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகின்றார். அத்துடன் கடந்த காலம் போல் அல்லாமல் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை எமது அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த அரசாங்கம் சர்வதேச நாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கூடுதலான வட்டி வீதத்திலான கடனை அடைப்பதற்கும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. அதனால் பாதையில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்வதன் மூலம் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையை மாற்ற முடியாது.