(எம்.மனோசித்ரா)

புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் பற்றி எமக்கு இதுவரையில் அறியக்கிடைக்கவில்லை. அதற்கான வரைபு கிடைக்கப் பெற்ற பின்னரே சுதந்திர கட்சி தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்.

எனினும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் நிச்சயம் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு குறித்து சுதந்திர கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது :

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கட்டாயத்தின் அடிப்படையில் நாம் அதனுடன் செயற்பாடுகளைகளை முன்னெடுத்தோம். இதனால் நாட்டில் ஸ்திரமற்ற நிலைமை தோற்றம் பெற்றது. குறிப்பாக ஆணைக்குழுக்களை அமைத்தல் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் என்பவற்றால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

சபாநாயகருக்கும் வரையறையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இலங்கை வரலாற்றில் சபாநாயகரொருவர் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்ததில்லை. ஆனால் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இவ்வாறு நடைபெற்றது. அதிகாரத்திற்கான போட்டிகள் ஏற்பட்டன. இதன் மூலம் ஸ்திரமற்ற அரசாங்கமொன்று உருவாகியமையே எஞ்சியது.

ஜனாதிபதி , பிரதமர் மற்றும் சபாநாயகர் என மூவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிவேறாகச் செயற்படத் தொடங்கினர். இதன் மூலம் அதிகார மையங்கள் மூன்று உருவாகின. இதன் காரணமாகவே 5 வருடங்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் போனது. அதனாலேயே நாம் ஆரம்பத்திலிருந்து 19 ஐ எதிர்தோம்.

ஆணைக்குழுக்களில் அங்கத்துவம் வகிப்பவர்கள் யாருக்கு பொறுப்பு கூற வேண்டும் ? ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் ஆணைக்குழு உறுப்பினர்களால் தவறிழைக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?

ஆணைக்குழுக்களில் ஏற்பட்டுள்ள நிலைமையை மாற்றுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைள் உள்ளிட்ட மேலும் பல விடயங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.