பிரணாப் முகர்ஜியின் மறைவு மிகவும் கவலைக்குரியது - ரணில் 

By T Yuwaraj

01 Sep, 2020 | 04:17 PM
image

(செய்திப்பிரிவு)

பிராந்திய அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விசாலமான அனுபவத்தையும் தெளிவையும் கொண்டிருந்த சிரேஷ்ட அரச தலைவரான இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவு மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவிற்காக வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தனது தாய்நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைக்காக பத்ம விபூஷண் மற்றும் பாரத ரத்னா ஆகிய விருதுகளைப் பெற்றுக்கொண்ட பிரணாப் முகர்ஜி, பாரத நாட்டிற்காக செய்த அர்ப்பணிப்பு அளவிடமுடியாததாகும்.

அவருடைய அரசியல் பயணத்தில் மிகவும் பொறுப்புவாய்ந்த பல்வேறு பதவிகளை வகித்தபோதும் இந்தியாவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோதும் இலங்கையுடன் அவரால் பேணப்பட்ட மிகவும் சுமுகமான நட்புறவுக்கொள்கை எமது மனங்களில் எப்போதும் நிலைத்திருக்கும்.

தனிப்பட்ட ரீதியில் என்னுடன் மிகவும் நெருங்கிய தொடர்பைப் பேணிவந்த பிரணாப் முகர்ஜியின் மறைவிற்காக நானும் பேராசிரியர் மைத்ரீ விக்கிரமசிங்கவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right