தங்கல்ல குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று திங்கட்கிழமை முற்பகல் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீரக்கெட்டிய - அஹூனுகொல வீதி, ஹூன்னகும்புர சந்திக்கு அருகில் வைத்து சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்றை நிறுத்தி குற்றத்தடுப்பு பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடமிருந்து போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள் 200 மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் உடயால பகுதியிலுள்ள போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படும் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்திய கணினி மற்றும் அச்சு இயந்திரம் ஆகியன கைப்பற்றப்பட்டது.