கம்பளை மற்றும் நிக்கவெரட்டிய பகுதிகளில் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் சிறுமி உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை
கம்பளை - விகுலவத்த பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கருகிலுள்ள குறுக்கு வீதியில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை பஸ் நிலையத்திலிருந்து முல்கம செல்வதற்காக புறப்பட்ட தனியார் பஸ்ஸொன்று வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமியின் மீது மோதியுள்ளது. இதன்போது குறித்த சிறுமி பஸ்ஸின் முன்பக்க சில்லில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நிகவெரட்டிய
நிகவெரட்டிய பொலிஸ் பிரிவு கட்டுகஸ்தொட்ட - புத்தளம் வீதி, பொலிஸ் நிலையத்திற்கருகில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வீதியில் வந்த மோட்டார் சைக்கிளொன்று வீதியைக் கடக்க  முற்பட்ட பாதசாரியொருவரின் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த  பாதசாரி நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. உயிரிழந்த நபர் தொடர்பில் இன்னும் எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையென பொலிஸார் குறிப்பிட்டனர்.