-நேர்காணல் : ஆர்.ராம்

9ஆவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு கிழக்கில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு நான் காரணமல்ல. அரசியலமைப்பு உள்ளிட்ட செயற்பாடுகளில் பங்கேற்று முன்னெடுத்தமையும், ஐ.நா.விடயங்களை கையாண்டமையும், சிங்கள ஊடகத்திற்கு வழங்கய செவ்வியும் தவறானவையாக இருந்திருந்தால் மக்களின் அங்கீகாரம் எனக்கு கிடைத்திருக்காது. நான் தோல்வி அடைந்திருப்பேன். ஆனால் கடந்த காலத்தில் நடைபெற்ற அனைத்து விடயங்களுக்கும் நானே பொறுப்பாளி என்று என்னை பிழையாக சித்தரித்தவர்களே தோல்வி அடைந்திருக்கின்றார்கள் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார். 

அச்செவ்வியின் முழுடிவடிவம் வருமாறு, 

கேள்வி:- பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளமைக்கான காரணங்களை மீளய்வு செய்துள்ளீர்களா?

பதில்:- 2015ஆம் ஆண்டு எமது பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட நல்லிணக்க அரசாங்கம் இடைநடுவே வீழ்ச்சி கண்டது. அந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனமே எம்மையும் பாதித்தது. அந்த நிலைமை 2018ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தலின் நீட்சியாக பொதுத்தேர்தலிலும் பிரதிபலித்துள்ளது. அத்துடன் அந்த அரசாங்க காலத்தில் எமது மக்களுக்கு பல்வேறு நன்மையான விடயங்கள் நடைபெற்றன. ஆனாலும், பலமடங்காக காணப்பட்ட எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை. அந்த நிலைமை பூதாகரமாக்கப்பட்டதோடு எதுவுமே நடைபெறவில்லை என்ற பிரசாரத்திற்கும் உரமிட்டது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகள் வட்டாரங்களில் உள்ள வேட்பாளர்களை அடியொற்றியதாக இருந்திருக்கும் என்றும் அவ்வாறானதொரு நிலைமை பாராளுமன்றத்தேர்தலில் வராது என்றும் கருதியிருந்தோம். ஆனால் அதனைவிடவும் அதிகமான பின்னடைவுகளே ஏற்பட்டிருக்கின்றன. இதனைவிடவும், பொருளாதார ரீதியான காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன. வாழ்வாதார விடயங்கள், வேலைவாய்ப்பு போன்றவையும் பிரதான பங்கு வகிக்கின்றன.

குறிப்பாக தமிழரசுக்கட்சியில் இளையோரை உள்ளீர்ப்பதற்கான விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆரம்பத்தில் துறைசார்ந்த இளம் சந்தியினருக்கு வேட்பாளர்களாக களமிறங்க சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்று சம்பந்தன் ஐயா அறிவித்திருந்தபோதும் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 11பேரில் நால்வர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். அத்துடன் எமது கட்சியின் வேட்பாளர்களிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையும் முக்கியமான காரணமாகின்றது.

கேள்வி:-பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகிய கையோடு நீங்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பின்னடைவுகளுக்கு கட்சித்தலைவரும், பொதுச்செயலாளரும் காரணமென்று பிரதிபலித்திருந்தீர்களே?

பதில்:- நான் அவர்கள் காரணமென்று கூறவில்லை. அவர்கள் இருவரினதும் தோல்விகள் கட்சியின் வெகுவான பின்னடைவை வெளிப்படுத்தியுள்ளது என்றே சுட்டிக்காட்டியிருந்தேன். 

கேள்வி:- சம்பந்தனும், நீங்களும் இணைந்து தன்னிச்சையாக எடுத்த தீர்மானங்களும், செயற்பாடுகளும் கூட்டமைப்பின் வெகுவான பின்னடைவுக்கு காரணமாகின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- சம்பந்தனும், நானும் கட்சியின் அனைத்து தீர்மானங்களையும் எடுத்து செயற்பட்டிருந்தோம் என்பதில் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பார்களாயின் எம் இருவருக்கும் அங்கீகாரம் வழங்கி இருக்க மாட்டார்கள் அல்லவா? அவ்வாறு நடைபெறவில்லையே. ஆகவே அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது,

கேள்வி:- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியாரான சசிகலா ரவிராஜ் தனது சொந்த பிரதேசத்திலேயே  பரப்புரைகளை முன்னெடுக்க முடியாது உங்கள் சார்பானவர்கள் நெருக்கடிகளை ஏற்படுத்தியதாகவும், விருப்பு வாக்குகள் தொடர்பிலும் பகிரங்கமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரல்லவா?

பதில்:- நான் அறிந்தவரையில் சசிகலா ரவிராஜ் அவ்வாறான கருத்துக்களை கூறவில்லை. அவருடைய பெயரில் இயங்கி வந்த முகநூல் ஒன்றிலேயே இந்த விடயங்கள் கூறப்பட்டிருந்தன. எனினும் அது தனக்கு உரித்தானது அல்ல என்று குறிப்பிட்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கேள்வி:- இல்லை, வீரகேசரி வாரவெளியீட்டுக்கு 17-07, 23-08 ஆகிய திகதிகளில் வழங்கிய பிரத்தியேக செவ்விகளில் அவர் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதோடு, பிரசாரக் காலத்தில் தென்மராட்சியில் உள்ள பல கிரமாங்களில் அவ்விதமான நிலைமைகள் காணப்பட்டுள்ளன?

பதில்:- சசிகலா ரவிராஜ், அவ்விதமான கருத்துக்களை தேர்தல் பிரசாரக்காலத்தில் வேறு பலருக்கும் கூறியிருப்பதாக எனக்கு அறியக்கிடைத்தது. ஆனால் நேரடியாக என்னிடத்தில் அவர் எதனையும் கூறவில்லை. உண்மையிலேயே சிங்கள ஊடகத்திற்கு நான் வழங்கிய செவ்விக்குப் பின்னர் என்னுடன் இணைந்து பிரசாரங்களை செய்தால் தாம் தோல்வி அடைந்து விடுவோம் என்ற மனநிலையில் தான் எமது கட்சியின் வேட்பாளர்கள் இருந்தார்கள். திருமதி ரவிராஜும் அத்தகைய நிலைப்பாட்டிலேயே இருந்ததாக நான் அறிந்திருந்தேன்.

சசிகலா தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தபோது நானே அவரை உள்ளீர்த்ததாக உண்மைக்கு மாறாக கூறினார்கள். அதன் பின்னர் அவர் பிரசாரப் பணிகளை ஆரம்பித்தபோது எமது கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் சயந்தனே அவரை பல இடங்களுக்கு அழைத்துச்சென்றிருந்தார். கொரோனா காலத்தில் நான் கொழும்பில் இருந்தேன். அதன்போது தான் செவ்வியையும் வழங்கியிருந்தேன். அதன் பின்னரேயே சசிகலா உட்பட ஏனைய வேட்பாளர்களும் என்னுடன் இணைந்து பொதுவெளியில் தோன்றினாலே தாங்கள் தோற்றுவிடுவோம் என்று அச்சம் கொண்டிருந்தனர்.

பெண்பிரதிநிதித்துவம் சம்பந்தமாக இறுக்கமான நிலைப்பாடுகளை நான் கடந்த காலத்தில் எடுத்திருந்தேன். ஆகவே பெண் பிரதிநிதித்துவம் அற்றுப்போக வேண்டும் என்ற வகையில் நிச்சயமாக நான் செயற்பட்டிருக்கவில்லை. ஆனால் சசிகலா ரவிராஜ் எனக்காக பிரசாரம் செய்த பெண்கள் அமைப்புக்களுடனேயே இணைந்து செயற்படுவதற்கு விரும்பியிருக்கவில்லை.

கேள்வி:-தேசியப் பட்டியலுக்கான பெயர் பட்டிலிலும் பின்னர் கிடைத்த தேசியபட்டியல் ஆசனத்திற்கான தெரிவிலும் உங்களுடைய ஆதிக்கம் இருந்ததாக கூறப்படுகின்றதே?

பதில்:- தேசியப்பட்டியலுக்கான பெயர்பட்டியலை தயாரிக்கும்போது, அம்பிகா சற்குணநாதனின் பெயரை சம்பந்தனே முன்மொழிந்தார். ஆனால் அவருடைய விருப்பினை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு மட்டும் தான் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அப்பணியை முன்னெடுத்தேன்.

ஆனால் நியமனக்குழு கூட்டத்தின்போது ஏற்கனவே எமது கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக புதிய இளம் சந்ததியினரை வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் யார் யாருக்கு ஆசனம் வழங்காது விடுவது என்பதில் குழப்பம் ஏற்படலாம் என்ற காரணத்திற்காக கடந்த முறை பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அனைவரையும் மீள போட்டியிட அனுமதிப்பதென்றும் மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன் நியமனக்குழு கூட்டத்தில் சரவணபனும் அமர்ந்திருக்கின்ற சந்தர்ப்பத்திலேயே அவருக்கு ஆசனம் வழங்க கூடாது என்றும் நேரடியாகவே கூறியிருந்தேன். அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருந்தேன். இதனை விட நான் எந்தவிதமான ஆதிக்கத்தினையும் செலுத்தவில்லை.

கேள்வி:- கட்சித்தலைவரின் தோல்வி, பெண் பிரதிநிதித்துவம் இன்மை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாது தேசியப் பட்டில் மூலமாக கிடைத்த ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்ட செயற்பாட்டிலும் தாங்களே செயலாளர் ஊடாக காய் நகர்த்தியதாக சொல்லப்படுகின்றதே?

பதில்:- எமக்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைக்கும் என்ற அடிப்படையில் நியமனக்குழுவில் அவற்றை யாருக்கு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முதலாவது ஆசனத்தினை திருமலையில் போட்டியிட்ட குகதாசனுக்கும், இரண்டாவது ஆசனத்தினை அம்பிகா சற்குணநாதனுக்கும் வழங்க வேண்டும் என்பதே அந்த தீர்மானமாகும்.  ஆகவே அந்த தீர்மானத்தினை மாற்றாது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது.

கடந்த 7ஆம் திகதி நானும் சிறிதரனும் மாவை.சேனாதிராஜாவின் இல்லத்திற்குச் சென்றோம். அதன்போது தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் பேசப்பட்டபோது மாவை.சேனாதிராஜா அதனை தனக்கு வழங்குமாறு எந்தச் சந்தர்ப்பத்திலும் கோரவில்லை. பெண் ஒருவருக்கு அல்லது அம்பாறைக்கு வழங்க வேண்டுமென்ற தனது நிலைப்பாட்டினையே வெளிப்படுத்தியிருந்தார். அந்தச்சந்தர்ப்பத்தில் ஏற்கனவே எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக குகதாசனுக்கு அந்த ஆசனத்தினை வழங்கி அவரை அம்பாறை மாவட்ட மேற்பார்வை உறுப்பினராக செயற்பட வைக்க முடியும் என்று நான் கூறியிருந்தேன். அதற்கு அடுத்து சம்பந்தன் தலைமையில் திருமலையில் நடைபெற்ற கூட்டத்திலும் இந்த நிலைப்பாட்டினையே நான் வெளிப்படுத்தியிருந்தேன்.

கேள்வி:-அப்படியென்றால் அம்பாறைக்கு தேசியப்பட்டில் ஆசனத்தினை வழங்குவதென்ற தீர்மானம் எவ்வாறு எடுக்கப்பட்டது?

பதில்:-திருமலையில் நடைபெற்ற கூட்டத்தின்போது, கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கமே அம்பாறைக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குவதற்கான நியானமான காரணத்தினை வெளிப்படுத்தி முன்மொழிவைச் செய்தார். அதாவது, கடந்த தடவை திருமலைக்கு வழங்கப்பட்டிருந்த தேசியப் பட்டியல் ஆசனம் இரண்டரை வருடங்களின் பின்னர் அம்பாறைக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும் அது நடைபெற்றிருக்கவில்லை. இம்முறை அங்கு பிரதிநிதித்துவமும் இழக்கப்பட்டுள்ளது. ஆகவே மேற்பார்வை உறுப்பினர்களை நியமிப்பதை விடவும் நேரடியாகவே அம்பாறைக்கு ஆசனமொன்று வழங்கப்பட வேண்டியது அவசியம் என்று பொதுச்செயலாளர் கூறினார். பொதுச்செயலாளரின் கருத்து நியாயமாக இருந்தாலும் கூட ஏற்கனவே எடுத்த தீர்மானத்தினை மாற்றி புதிய தீர்மானம் எடுக்கப்பட கூடாது என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. அதனை அவ்விடத்திலே வெளிப்படுத்தியிருந்தேன்.

கேள்வி:- ஆனால் பங்காளிக்கட்சிகள், தேசியப் பட்டியல் ஆசனத்தினை உங்களின் கட்சித் தலைவருக்கு வழங்கவேண்டும் என்றல்லவா தீர்மானித்து அறிவித்திருந்தன?

பதில்:- எமது நியமனக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை பங்காளிக்கட்சிகளும் அறியும். அவ்வாறிருக்க திடீரென அந்த தீர்மானத்திற்கு எதிராக பங்காளிக்கட்சிகள் ஒரு தீர்மானத்தினை ஏன் எடுத்தார்கள் என்பது எனக்கு புரியாதுள்ளது.

கேள்வி:- தேர்தலில் போட்டியிடுவதற்கு சரவணபவனுக்கு வாய்ப்பு வழங்ககூடாது என்ற நிலைப்பாட்டில் நீங்கள் இறுக்கமாக இருந்தமைக்கு என்ன காரணம்?

பதில்:- அதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றை பகிரங்கமாக கூற முடியாது.  ஆனால் அனைத்துக் காரணங்களையும் நான் கட்சித்தலைவர் மாவை. சேனாதிராஜாவிடத்தில் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கூறியிருந்தேன். அதன் பின்னர் தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் பிறிதொரு கூட்டத்திற்காக சென்றிருந்தபோது, மாவை.சேனாதிராஜா அங்கு பிரசன்னமாகி சரவணபவனுக்குச் சொந்தமான ஊடகத்தில் வெளியான பிரதான செய்தியொன்றை சுட்டிக்காட்டி கடுந்தொனியில் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அதன்போது, நான் 'இவ்விதமான காரணங்களால் தான் அவருக்கு(சரவணபவனுக்கு) ஆசனங்களை வழங்க கூடாது என்று முன்னரே கூறினேன்' என்று குறிப்பிட்டேன். நான் இவ்வாறு குறிப்பட்டதை அலுவலகத்திலிருந்து சிலர் பகிரங்கப்படுத்தி விட்டனர். ஆனால் அவருக்கு எதிரான எனது நிலைப்பாட்டினை நான் பொதுவெளியில் பேசியது கிடையாது. கட்சித்தலைமையிடத்திலும், நியமனக் குழுவிலும் (அவர் முன்னிலையிலேயே) தான் வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால் சரவணபவன்,பொதுவெளியில் என்னை கடுமையாக விமர்சித்தார். இரு வாரத்தில் நான் தூக்கி எறியப்படுவேன் என்றெல்லாம் தனது ஊடகத்தினைப் பயன்படுத்தி பிரசாரம் செய்தார். ஈற்றில் அதற்கெல்லாம் மக்கள் சரியான தீர்ப்பளித்துள்ளனர்.

கேள்வி:- தேர்தலில் வேட்பாளர்களுக்கு இடையிலான ஒற்றுமை பற்றி கரிசனையை வெளிப்படுத்துகின்றீர்கள் ஆனால் சுன்னாகத்தில் நடைபெற்ற நீங்கள் பதிலளிக்கும்  கூட்டத்தில் கட்சித்தலைமை மிகமோசமாக விமர்சிக்கப்பட்டதோடு அதுவொரு திரைமறைவு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றதே?

பதில்:-2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18ஆம் திகதியிலிருந்து எம்மை விமர்சிப்பவர்களின் வினாக்களுக்கு பொதுவெளியில் பதிலளிக்கும் முறைமையொன்றை நான் பின்பற்ற ஆரம்பித்திருந்தேன். முதலாவதாக சி.வை.தாமோதரப்பிள்ளையின் நினைவுப்பேருரை ஆற்றுவதற்கு அழைக்கப்பட்டபோது அதில் பங்குபெறுபவர்கள் என்னிடத்தில் கேள்விகளை எழுப்ப விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டு அந்த நிகழ்வில் எழுப்பபட்ட கேள்விகளுக்கு பதில்களை வழங்கியிருந்தேன். அதன்பின்னர் அவ்விதமான நிகழ்வுகள் சாவகச்சேரி, யாழ்.வீரசிங்கம் மண்டபம், வடமராட்சி என்று தொடர்ந்து ஐந்தாவதாக சுன்னாகத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வுகளின் ஏற்பாடுகளிலோ பங்கேற்பவர்கள் விடயத்திலோ எனக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை.

அவ்வாறிருக்க, சுன்னாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது வினவப்பட்ட பல கேள்விகளில் மாவை.சேனாதிராஜா பற்றியொரு கேள்வியும் இருந்தது. எனினும் அந்தக் கேள்விக்கு எனக்கு பதிலளிக்க முடியாதிருந்தது. அதனை நான் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தேன். யாருக்கு ஏன், நியமனம் வழங்கப்படவில்லை என்பதை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது. நியமனக்குழு தீர்மானங்களை பொதுவெளியில் பேச முடியாது. உட்கட்சி இரகசியங்களை பகிரங்கப்படுத்தமாட்டேன் என்றும் நான் கூறியிருந்தேன். இவ்வாறிருக்க, நான் பதிலளிக்காமையானது மாவை.சேனாதிராஜாவிடத்தில் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. கட்சித்தலைமைக்கு எதிராக நான் செயற்பட்டது போன்று சித்தரிக்கப்படுவது மிகவும் மோசமான நிலையாகும்.

கேள்வி:- சிறிதரன், சிவமோகன், கோடீஸ்வரன் என்று பங்காளிக்கட்சிகளின் ஆசனங்கள் ஊடாக உறுப்புரிமை பெற்றவர்கள் கட்சி மாறிய தருணங்களில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலை தொடர்கதையாக இருக்கின்றதே?

பதில்:- நான் தேர்தல் அரசியலில் பிரவேசித்ததன் பின்னரான சந்தர்ப்பத்தில் சிவமோகன் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்தபோது ஈ.பி.ஆர்.எல்.எப்.உறுப்பினரான அவர் எமது கட்சியின்கூட்டத்திற்கு எவ்வாறு வரமுடியும்.அவரை உடனடியாக வெளியேற்றுங்கள் என்று முதலாவதாக குரல் எழுப்பியவன் நான். இருப்பினும் அவர் அந்தக் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயற்பட போவதாகவும் கூறியிருந்தார். அது தனிமனிதருக்குள்ள ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கோடீஸ்வரன் தமிழரசுக்கட்சியின் ஆயுட்கால உறுப்பினர். அம்பாறையில் ரெலோவிற்கு ஆசனம் வழங்கப்பட்டபோது எமது கட்சியின் உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்கப்போவதாக ரெலோ தெரிவித்தபோது நாம் அதனை ஆதரித்தோம். அவரும் வெற்றிபெற்ற ஐந்து வருடங்கள் ரெலோ சார்பாக செயற்பட்டார். அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவுமில்லை. அதன் பின்னர் அவர் மீண்டும் எமது கட்சியின் உறுப்பினராக செயற்படுகின்றார்.

கேள்வி:- சிங்கள ஊடகத்தற்கு நீங்கள் வழங்கிய நேர்காணலின் பின்னர் எழுந்த சர்ச்சைகளின்போது ஊடகப்பேச்சாளர் பதவிலிருந்து உங்களை விலகுமாறு கோரப்பட்டதா?

பதில்:- இல்லை.

தொடர்ச்சி...

பின்னடைவுகளுக்கு நான் காரணமல்ல: சுமந்திரன் விசேட செவ்வி - பகுதி 02