பின்னடைவுகளுக்கு நான் காரணமல்ல: சுமந்திரன் விசேட செவ்வி - பகுதி 01

தொடர்ச்சி...

கேள்வி:- அந்த நேர்காணலின் பின்னர் எழுந்த சர்ச்சைகளும், தொடர்ச்சியாக நீங்கள் ஊடகப்பேச்சாளராக நீடித்து முன்னெடுத்த செயற்பாடுகளும் தேர்தல் பின்னடைவுக்கு தாக்கம் செலுத்திய காரணங்களில் ஒன்றாக கருதுகின்றீர்களா?

பதில்:- எனது கருத்துக்களும், செயற்பாடுகளும் தவறாக இருந்திருந்தால் நான் அல்லவா தேர்தலில் தோல்வி அடைந்திருக்க வேண்டும். ஆனால் மக்கள் எனக்கு ஆணை வழங்கி அங்கீகரித்துள்ளனர். அதேநேரம், எனது கருத்து தவறு என்று பிரசாரம் செய்தவர்கள் தோல்வியடைந்திருக்கின்றார்கள்.

கேள்வி:- கூட்டமைப்பின் ஊடப்பேச்சாளர், கொறடா பதவிகள் பங்காளிக்கட்சிகளுக்கு வழங்குவதென கொள்கை அளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?

பதில்:- இந்த விடயத்தினை பங்காளிக்கட்சிகள் தான், ஊடகங்கள் ஊடாக கூறிவருகின்றன. இந்தப் பதவிகளை பாராளுமன்றக் குழுவே தீர்மானிக்கும். ஊடகச் செய்திகளை அடுத்து இந்த விடயம் சம்பந்தமாக பேசுவதற்காக சம்பந்தன் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டிருந்தார். அதன்போது, பதவிமாற்ற செய்திகள் வெளியாகி வருகின்றமை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அச்சமயத்தில் அதன் பின்னணியை அறிந்துள்ள நான் அதற்கான அவசியமில்லை என்று பதிலளித்துள்ளேன். 

கேள்வி:- கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியை பங்காளிகளுக்கு வழங்குவதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா?

பதில்:- இதனை பாராளுமன்றக் குழுவே தீர்மானிக்கும். பாராளுமன்றக்குழுவில் எடுக்க வேண்டிய தீர்மானம் குறித்து நான் பதிலளிக்க முடியாது. மேலும் புதிய பாராளுமன்ற குழு முதற்தடவையாக கூடியபோது புதிய நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அவற்றை அன்றையதினமேசெய்ய முடியும் என்றும் சம்பந்தன் கூறினார். ஆனால் அச்சமயத்தில் யாரும் எதுவும் பேசவில்லை.

பாராளுமன்ற குழுக்களுக்கான தெரிவுகளை மேற்கொள்வதற்கான குழுவிற்கு உறுப்பினரை உடனடியாக நியமிக்க வேண்டியிருந்தது. கடந்த தடவை மாவை.சேனாதிராஜா அந்தப்பதவியை வகித்திருந்த நிலையில் தற்போது அதனை செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்குவதென்று நான் முன்மொழிந்தேன். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடந்த பாராளுமன்றில் குழுக்களுக்கான பிரதி தலைவர் பதவியை எமக்கு தருவதாக ரணில் விக்கிரமசிங்க கூறியபோது நானே செல்வம் அடைக்கலநாதனை பிரேரித்திருந்தேன். அப்போது ரெலோவிற்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்தனர். அதிலும் ஒருவர் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர். அந்தப் பதவியை ரெலோவிற்கு வழங்கிவிட்டு தமிழரசுக்கட்சி பங்கீடு கோரவில்லை என்பதையும் நினைவு படுத்த வேண்டியுள்ளது.

கேள்வி:- தனிப்பட்ட முறையில் ஊடகப்பேச்சாளர் பதவியில் நீடிக்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?

பதில்:-தனிப்பட்ட விருப்பு இல்லை. பாராளுமன்ற குழுவே தீர்மானிக்க வேண்டும்.

கேள்வி:-தமிழரசுக்கட்சியின் தலைமையை சிறிதரன் ஏற்க தயாராக இருப்பதாக கூறியபோது அதற்கு பூரண ஆதரவளிப்பதாக கூறியிருக்கின்றீர்களே, அப்படியென்றால் கட்சி தலைமை மாற்றம் தொடர்பில் நகர்வுகளைச் செய்கின்றீர்களா?

பதில்:- இந்த விடயத்தில் ஊடகங்களின் தலைப்பிடுதலால் குழப்பநிலையொன்று ஏற்பட்டுவிட்டது. சிறிதரனிடத்தில் கட்சித்தலைவர், பதவியை ஏற்கத்தயாரா என்று வினவப்பட்டபோது, அவர் தற்போதைக்கு கட்சித்தலைவர் பதவியில் மாற்றம் தேவையில்லை என்றே முதலில் பதிலளித்திருக்கின்றார். பின்னர், அவரிடத்தில் துருவப்பட்டபோது தலைமையை ஏற்க வேண்டிய சூழலொன்று வருமாயின் அனைவரும் இணைந்து வழங்கினால் ஏற்பேன் என்று கூறியிருக்கின்றார். அவ்வாறான நிலைமை உடன் வருமென்று அவர் எங்கும் கூறவில்லை.

இந்த விடயம் வெளியாகி இரண்டு நாட்களின் பின்னர் சிறிதரனின் கருத்து தொடர்பில் என்னிடத்தில் வினவப்பட்டபோது, சிறிதரன் உடனடியாக தலைமைப்பதவியை கோரவில்லை என்றே கூறியிருக்கின்றார். அவருடைய கருத்தினை கவனமாக பாருங்கள். அனைவரும் இணங்கி தலைமைப்பதவியை வழங்கும் நிலைமையொன்று வருகின்றபோது நானும் அதில் உள்ளடங்குகின்றேன் என்றே கூறினேன். இந்தக் கருத்தை, சிறிதரன் தலைமையேற்க சுமந்திரன் ஆதரவு என்று தலைப்பிட்டு விட்டார்கள். அவ்வாறிருக்க, தற்போதைய நிலையில் அவ்விதமான மாற்றங்கள் எதுவும் அவசியமில்லை.

கேள்வி:- கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் முதுமை உள்ளிட்ட விடயங்களை கருத்தில்கொள்கின்றபோது, கூட்டமைப்பிற்கான புதிய தலைமை யார் என்ற விடயம் முக்கியமாகின்றதல்லவா?

பதில்:- இதற்கு நான் பதிலளித்தால் சிறிதரனுக்கு ஏற்பட்ட நிலையே எனக்கும் ஏற்படும்.

கேள்வி:- அவ்வாறில்லை, அடுத்த தலைமைத்துவத்தினை வழங்க தயாராக இருப்பவர்களை அடையாளம் காண முயல்வது யதார்த்தமான விடயம் தனே?

பதில்:- 'ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பதவியை உங்களுக்கு வழங்கினால் ஏற்பீர்களா?' என்று யாராவது என்னிடத்தில் வினா எழுப்பினால் நான் 'ஆம்' என்றே பதிலளிப்பேன். அவ்வளவு தான், உங்களுடைய இந்த வினாவுக்கு எனது பதிலாகும்.

கேள்வி:- தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு சாத்தியமான சூழல்கள் இருக்கின்றதென நம்புகின்றீர்களா?

பதில்:- பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள் சிங்கள,  பௌத்த நிலைப்பாட்டில் தான் செயற்படப்போகின்றார்கள். இதற்கு எதிராகவே எமது செயற்பாடுகளும், விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோரின் செயற்பாடுகளும் அமையவுள்ளன. ஒன்றிணைந்து செயற்படுவதில் அவர்கள் முரண்டு பிடித்தாலும் செயற்பாடுகள் ஒரேகோணத்திலேயே அமையப்போகின்றன. ஆகவே ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதாகவே அது பிரதிபலிக்கும்.

கேள்வி:- ஆகக்குறைந்தது பாராளுமன்ற செயற்பாடுகளிலாவது பொது இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா?

பதில்:- இந்தப்பாராளுமன்றில் எமக்கு 10ஆசனங்களும், மனோகணேசனக்கு 6ஆசனங்களும், ரவூப் ஹக்கீமிற்கு 5ஆசனங்களும், ரிஷாத் பதியூதீனுக்கு 4ஆசனங்களும் உள்ளன. தமிழ் பேசும் தரப்பாக 25 ஆசனங்கள் காணப்படுகின்றன. நாம் இணைந்து செயற்படுவதென கொள்கை அளவில் இணக்கம் கண்டிருக்கின்றோம். ஆகவே ஒரு ஆசனத்தினைக் கொண்டிருக்கும் விக்கினேஸ்வரனும், இரு ஆசனங்களைக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமாரும் இந்த தரப்புடன் இணைந்து செயற்படுதே பொருத்தமானது.

கேள்வி:- மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இருக்கும் புதிய ஆட்சியாளர்களுடன் இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட விடயங்களில் சாத்தியமான அனுகுமுறைகளைச் செய்ய முடியும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயராகவே உள்ளோம். மேலதிகமான அணுகுமுறைகளையும் சரியான பாதையிலே செய்கின்றோம். இந்திய தரப்புடனான எமது முதற்சந்திப்பே அதற்கு உதாரணமாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை செய்யப்போவதில்லை என்று மார்பு தட்டிய ஆட்சியாளர்கள், இந்திய, இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர்கள் சார்பில் கையொப்பமிட்ட இந்திய தரப்பினை சந்தித்து 13ஆவது திருத்தச்சட்டத்தினை பாதுகாக்குமாறு நாம் வலியுறுத்தியதை அடுத்து, தற்போது இந்தியாவுடன் பேசாதீர்கள் எம்முடன் பேசுகள் என்று கெஞ்சும் நிலைக்கு வந்து விட்டார்கள். எமது முதல் அழுத்தமே அவர்களின் ஏதேச்சதிகார நிலைப்பாட்டினை தலைகீழாக மாற்றியுள்ளது. ஆகவே கூட்டமைப்பின் நகர்வுகளை சரியாக அவதானிக்கின்றபோது எமக்கு ஆணை வழங்கிய மக்களும் நிலைமைகளை புரிந்து கொள்ள முடியும்.