-சத்ரியன்

பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வைத்திருக்க முடியுமா?-, இந்தக் கேள்வி, கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே அரசியல்வாதிகளாலும், சட்ட நிபுணர்களாலும் எழுப்பப்பட்டு வருகிறது.

ஏனென்றால், 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி, ஜனாதிபதியினால் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட எந்தவொரு அமைச்சையும், தன்வசம் வைத்திருக்க முடியாது.

ஆனால், கோத்தாபய ராஜபக்ச கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், பாதுகாப்பு அமைச்சராக எவரையும் நியமிக்கவில்லை. அதனை அவர் தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.

முன்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக தனது சகோதரர் சமல் ராஜபக்சவை நியமித்திருந்த ஜனாதிபதி, தமக்கு மிகவும் விசுவாசமான முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு செயலாளராகவும் நியமித்திருந்தார்.

அதுவே அவருக்குப் போதுமானதாக இருந்தது.

அண்மையில் பொதுத்தேர்தலுக்குப் பின்னர், புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்கள், மற்றும் பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்  ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட போது, அதில் முதலாவதாக இருந்தது பாதுகாப்பு அமைச்சு தான். 

அதற்குள், உள்ளக பாதுகாப்பு மற்றும் உள்நாட்டலுவல்கள், அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பதவியும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

அந்த இராஜாங்க அமைச்சர் பதவி சமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னர், உள்ளக பாதுகாப்பு மற்றும் உள்நாட்டலுவல்கள், அமைச்சு தனியாக இருந்தது.

அது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு, அதற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சராகவே, சமல் ராஜபக்ச இருக்கிறார்.

இதற்குள் தான் மாவட்ட, பிரதேச செயலகங்கள், பொலிஸ், குடிவரவு குடியகல்வு, ஆட்பதிவு, பதிவாளர் நாயகம், அனர்த்த முகாமைத்துவம் போன்ற திணைக்களங்கள் இருக்கின்றன.

அதேவேளை, பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவே இருப்பார் என்று பதவியேற்பு நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் தான் முப்படைகள், தொல்பொருள் திணைக்களம் போன்றவை இருக்கின்றன. அவற்றையோ அவை சார்ந்த இராஜாங்க அமைச்சுப் பொறுப்பையோ கூட, தனது சகோதரருக்குக் கூட ஜனாதிபதி விட்டுத் தரவில்லை.

ஆனால், அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட பின்னர், அதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ வர்த்தமானி அறிவிப்பில், பாதுகாப்பு அமைச்சர் தொடர்பான எந்த தகவலும் இல்லை.

வர்த்தமானியில், பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி இருப்பார் என்றும் குறிப்பிடப்படவில்லை. 

பாதுகாப்பு அமைச்சு குறித்த வர்த்தமானியை வெளியிட்ட ஜனாதிபதியே, அந்த அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சர் யார் என்பதை அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தவில்லை.

இதற்கு முக்கியமான காரணம், 19 அவது திருத்தச்சட்டம் தான்.

19 ஆவது திருத்தச்சட்டத்தின் படி, எந்தவொரு அமைச்சும் ஜனாதிபதியிடம் இருக்க முடியாது.

இருந்தாலும், பாதுகாப்பு அமைச்சு இப்போதும் ஜனாதிபதியிடம் தான் இருக்கிறது. அவரே அதனை மேற்பார்வை செய்கிறார்.

ஆனால், அவர் அதற்கு அதிகாரபூர்வமாக பொறுப்பேற்கவில்லை. அவ்வாறு பொறுப்பேற்கவும் முடியாது. அது அரசியலமைப்பு மீறலாகும்.

அரசியலமைப்பை மீறாமல் ஆட்சியை நடத்துவது பற்றி அதிகளவில் தனது உரைகளில் குறிப்பிடும் ஜனாதிபதியே, பாதுகாப்பு அமைச்சு விடயத்தில் அதனைப் பின்பற்றத் தவறியுள்ளார் என்பது தான் முக்கியமான விடயம்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி மீது அண்மையில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, அவரது பிரதம சட்ட ஆலோசகரும், நீதியமைச்சருமான அலி சப்ரி. பாதுகாப்பு அமைச்சை வைத்திருப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்று கூறியிருந்தார்.

எவ்வாறெனின், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்கு தேவையான, எதையும் செய்வதற்கு தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாக, நீதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டிருந்தார்.

இது அரசியலமைப்பின் மூலமாக நேரடியாக வழங்கப்பட்ட அதிகாரம் அல்ல. 

எவ்வாறாயினும் அரசாங்கத்தில் உள்ள அரசியலமைப்பு சட்ட நிபுணர் என்று கூறப்படும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடந்த வாரம் நெலும்பொக்குணவில் நடத்திய  செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

19 ஆவது திருத்தத்துக்கு அமைய பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி வைத்திருக்க முடியாமல் செய்யப்பட்டது என்றும், அதன் விளைவை பொதுமக்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் அனுபவிக்க நேரிட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதனால், 20 ஆவது திருத்தத்தில், பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி வைத்திருக்கக் கூடிய வகையில் மாற்றங்கள் செய்யப்படும், என்றும் அமைச்சர் பீரிஸ் கூறியிருக்கிறார்.

அவ்வாறாயின், இப்போது ஜனாதிபதியிடம் பாதுகாப்பு அமைச்சு இருப்பது அரசியலமைப்புக்கு ஏற்புடையதல்ல என்பது உண்மை.

ஆனால், அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

தற்போது கூட ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒருவரல்ல. அவ்வாறு பொறுப்பு வாய்ந்த ஒருவராக இருந்தால், அதனை அவர் வர்த்தமானி மூலம் பாதுகாப்பு அமைச்சர் என்று பிரகடனம் செய்திருப்பார். செய்திருக்க வேண்டும்.

அவ்வாறு அறிவிப்பதற்கு சட்டரீதியான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதையே அமைச்சர் பீரிசின் கருத்து உணர்த்துகிறது.

ஆனால் நீதியமைச்சர் அலி சப்ரி ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இந்த விடயத்துக்குப் பதிலளித்திருக்கவில்லை. அவர், தமது பக்கவாதியின் ஒரு சட்டத்தரணி போலவே கருத்து வெளியிட்டிருந்தார்

எவ்வாறாயினும், 19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. 

அதனை மீறி ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை வைத்திருப்பது அரசியலமைப்பை மீறுகின்ற செயல் தான்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்தபோது பாதுகாப்பு விடயத்தில் காண்பித்த பல அக்கறையீனங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

இதுபோன்ற ஒரு பாரதூரமான ஒரு சம்பவம் நிகழ்ந்தால் தான், பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பில் யார் இருந்தார் என்றும், அதற்கு யார் பொறுப்பேற்பது என்றும் கேள்வி எழும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரசியலமைப்புக்குட்பட்ட வகையில் ஆட்சியை நடத்துவதாக காட்டிக் கொண்டாலும், பாதுகாப்பு அமைச்சு விடயத்தில், அவர் அரசியலமைப்புக்குட்பட்டு செயற்படவில்லை.

அவ்வாறு செயற்படுபவராக இருந்தால், பாதுகாப்பு அமைச்சை அவர் தனது பொறுப்பில் வைத்திருக்கமாட்டார்.

இந்தளவுக்கும் பாதுகாப்பு அமைச்சு ஒன்றும், சாதாரணமானது அல்ல. தற்போதைய அரசாங்கத்தில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் நேரடியாக, 23 அரச நிறுவனங்களும், இராஜாங்க அமைச்சின் ஊடாக மறைமுகமாக 12 நிறுவனங்களுமாக, மிக முக்கியமான 35 அரசதுறை நிறுவனங்கள் இயங்குகின்றன.

இவற்றை வலிமையான- நிர்வாகத் திறன்கொண்ட பாதுகாப்பு செயலாளரின் மூலம் மேற்பார்வையிட முடியும் என்பது ஜனாதிபதியின் நம்பிக்கையாக இருக்கலாம்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது, பாதுகாப்பு அமைச்சராக அவரே, இருந்தாலும், பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச தான் அதனை முற்றுமுழுதாக நிர்வகித்துக் கொண்டிருந்தார்.

அதுபோலத் தான், இப்போது பாதுகாப்புச் செயலராக உள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அந்தப் பொறுப்பை வகிக்கிறார்.

ஆனால், ஒரு வித்தியாசம், பாதுகாப்பு அமைச்சர் என்று அறிவிக்கப்பட்டாலும், அதிகாரபூர்வமாக ஜனாதிபதியிடம் அந்தப் பதவி இல்லை.

தவறுகள் ஏதும் நிகழாத வரையில், ஜனாதிபதி தப்பித்துக் கொள்ளலாம். 

தவறு நடந்த பின்னர் தான், அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஜனாதிபதிக்கு வரும்.

அந்தக் கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்க வேண்டிய நிலையில் ஜனாதிபதி இல்லாவிட்டாலும், பாதுகாப்பு அமைச்சரை நியமிக்கத் தவறியதற்காக, அரசியலமைப்பை மீறியதாக ஜனாதிபதி குற்றச்சாட்டுக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.

சட்டத்தின் ஆட்சி பற்றி சர்வதேசம் வலியுறுத்துகின்ற நிலையில், அரசியலமைப்பு சட்டத்துக்கு மாறாக ஜனாதிபதி பாதுகாப்பு அசமைச்சை நீண்டகாலத்துக்கு வைத்திருக்க முடியாது. அவ்வாறு வைத்திருந்தால் அதுவும் ஒரு சட்ட ஆட்சியின் மீறலாகத் தான் பார்க்கப்படும்.