(செய்திப்பிரிவு)

வெவ்வேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை

வாழைச்சேனை - பாலைக்காடு பகுதியில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிஸார் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது ஹெரோயின், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளோடு சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 2 கிராம் கஞ்சா மற்றும் 1538 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறு வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 28 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வெலிக்கடை

வெலிக்கடை - பண்டாரநாயக்கபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிராண்ட்பாஸ் 

கிராண்ட்பாஸ்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 75 ஆம் தோட்டத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.  

சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 680 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.