புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அட்டவில்லு, கியுல வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் அட்டவில்லு பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) கியுல பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று, அதே திசையை நோக்கிப் பயணித்த கெப் ரக வண்டி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த வயோதிப பெண் மீது லொறி மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த குறித்த வயோதிப பெண்ணை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்துடன், தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ள புத்தளம் பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.