சென்னையில் தனது தாயாரின் பெற்றோரின் தொடர்மாடி வீட்டில் சிற்றன்னைமாரினதும் மாமன்மாரினதும் குடும்ப நண்பர்களினதும் கால்களுக்கிடையில் ஒரு சிறுமியாக  சுற்றித்திருந்த கமலா ஹரிஸ் இளம் பெண்ணாக வளர்ந்துவந்தபோது தமிழிலேயே அழைக்கப்பட்டு பழக்கப்பட்டவர்.

 கமலாவின்  பாட்டி பேசிய பிரதான மொழி தமிழ்தான். அவருக்கு அரைகுறையாக மாத்திரமே ஆங்கிலத்தைப் பேசக்கூடியதாக இருந்தது. தாயாரின் குடும்பத்தினரை பார்ப்பதற்காக சிறு பராயத்தில் கமலா  கலிபோர்னியாவில் இருந்து சென்னைக்கு ( அப்போது அது மட்ராஸ் என்றே அழைக்கப்பட்டது) பலவருடங்களாக வந்துபோனதன் காரணத்தினால் அவர் தனது இந்திய உறவினர்களின் தாய்மொழியை மெதுமெதுவாக  விளங்கிக்கொள்ளவும் பேசவும் கூட கற்றுக்கொண்டார்.

 (மும்பையில் கமலா ஹரிஸை வாழ்த்தும் சுவரொட்டியை வரையும் ஓவியர்)

 

   வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துணை ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை ஜனநாயகக் கட்சியின் மகாநாட்டு மேடையில் கடந்தவாரம்  ஏற்றுக்கொண்ட கமலா உரையை நிகழ்த்துக்கொண்டிருந்தபோது இடையில் தனது இந்திய மரபுரமை பற்றி ஒப்புதலை அளித்தததை காணக்கூடியதாக இருந்தது."எமது இந்திய மரபுரிமை குறித்து தெரிந்துகொள்ளக்கூடியதாகவும் பெருமைகொள்ளக்கூடியதாகவும் எமது தாயார்  எம்மை வளர்த்திருந்தார் " என்று கூறிய அவர், " எனது குடும்பம் என்றால் அது எனது மாமன்மாரும் மாமிமார்களும் எனது சித்திகளுமே" என்றும் அவர் குறிப்பிட்டார்.

   அமெரிக்க ஜனாதிபதி களமிறங்குகின்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதலாவது வேட்பாளர் கமலாவேயாவார். சிற்றன்னைகளை அன்பாக அழைக்கப் பாவிக்கப்படுகின்ற ' சித்தி' என்ற தமிழ்ச்சொல்லை அவர் தனது உரையில் குறிப்பிட்டது அமெரிக்காவில் உள்ள தெற்காசிய குடும்பங்கள் மற்றும் 8 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இந்தியாவில் கேட்டுக்கொண்டிருந்த குடும்பங்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

" எனது கண்கள் மெய்யாகவே கலங்கிவிட்டன.கமலா ஹரிஸ் சித்தி(ஸ்) என்று சொன்னதும் எனது மனம் பெருமிதமடைந்தது" என்று சமையல்கலை நிபுணரும் மாடல் அழகியுமான பத்மா  லக்சுமி ருவிட்டர் சமூகவலைத்தளத்தில் பதிவுசெய்திருக்கிறார். கமலாவின் தாயாரைப்போன்றே இவரும் சென்னையில் பிறந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்.

(கலிபோர்னியாவில் சிறுமியாக கமலா ஹரிஸ்)

 

 கமலா தனதுரையில் தமிழைப் பயன்படுத்தியதனால் இந்தியாவில் அதுவும் குறிப்பாக அவரது பாட்டன் ( தாயாரின் தந்தை) பி.வி.கோபாலன் 1911 ஆண்டில் பிறந்த தமிழ்நாட்டின் கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான பைங்கநாட்டில் அவரது ரசிகர் கூட்டத்தை பெரிதும் அதிகரித்துவிட்டது. கமலா சிறுமியாக அந்த கிராமத்துக்கு ஒரு தடவை அந்த கிராமத்துக்கு பாட்டனாருடன் சென்றிருக்கிறார்.

   கடந்தவாரம் அந்த கிராமம் எங்கும் கமலாவின் பிரகாசமான முகத்தையும் உள்ளூரின் பெருமையை வெளிப்படுத்தும் சுலோகங்களையும் கொண்ட சுவரொட்டகள் காணப்பட்டன. அவற்றில் கமலாவை சிங்கமனம் கொண்ட பெண்மணி என்று வர்ணிக்கப்பட்டதுடன் அவர்  வெற்றி பெற வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

 பைங்கநாடு கிராமத்தின் தேநீர்க்கடைகளிலும் ஒவ்வொரு ஒழுங்கையிலும் அந்த சுவரொட்டிகள் ஒட்டப்படுவதற்கும் பதாகைகள்  தொங்கவிடப்படுவதற்கும்  ஏற்பாடுகளைச் செய்தவர்களில் 27 வயதான பாரதி செல்வம் என்ற இளைஞரும் ஒருவர்.அவரின் பாட்டனாருக்கு கமலாவின் பாட்டனாரைத் தெரியும்." இது எங்களுக்கு மிகுந்த  பெருமை தரும் ஒரு தருணமாகும்.நாம் எல்லோரும் உற்சாகமடைந்திருக்கிறோம்.கமலாவுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் அறிவிப்புக்களையும் அறிகுறிகளையும் ஒவ்வொருவரும் காட்சிக்கு வைத்திருக்கின்றனர்.அமெரிக்க அரசியலைப் பற்றி வாசிக்க ஆரம்பித்திருக்கிறோம்.கமலாவுக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருக்கிறோம். நிச்சயமாக அவர் தேர்தலில் வெற்றிபெறுவார் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம் ".என்று அந்த இளைஞன் கூறினார்.

  கமலாவின் இந்தியப்பக்க குடும்பம் இன்னமும் கூட பைங்கநாடு கிராமத்தில் உள்ள தர்ம சாஷ்திர கோவிலுக்கு நிதி உதவிகளை அனுப்பிக்கொண்டிருக்கிறது. அந்த கோவிலின் சுவரி்ல் அவரது குடும்பத்தவர்களின் பெயர்களுடன் சேர்த்து அவரின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கிறது. கமலாவுக்கு நல்லாசி வேண்டி சிறியதொரு மதக்கிரியையையும் பிரார்த்தனையையும் நடத்துமாறு அவரின் சித்தியான சரளா கோபாலன் தன்னைக் கேட்டுக்கொண்டதாக அந்த கோவிலின் நிருவாகி எஸ்.வி.ரமணன் ( வயது 71) கூறினார்." இந்தச் செய்தியால் கிராமத்தவர்கள் மிகவும் பெருமிதமடைகிறார்கள்" என்றும் அவர் தெிவித்தார்.

 (சென்னையில் கமலாவின்  பாட்டனும் பாட்டியும் முன்னர் வசித்த தொடர்மாடி வீடு)

பேர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி.செய்வதற்காக வாய்ப்புக்கிடைத்ததும் கமலாவின் தாயார் சியாமளா கோபாலன் 19 வயதில் இந்தியாவை விட்டுப் போய்விட்டார்.அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் கூட, தனது இரு மகள்மாரும் தங்களது இந்திய மரபுரிமையுடனான தொடர்பை இழந்துவிடாதிருப்பதை சியாமளா உறுதிசெய்தார் என்று கமலாவும் அவரது உறவினரின் கூறுகிறார்கள்.

   புற்றுநோய் ஆராய்ச்சி நிபுணராக பணியாற்றிய சியாமளா பிரபலமான சாஸ்திரிய சங்கீத பாடகியுமாவார். அவர் ஓய்வுபெற்ற தனது பெற்றோரை பார்வையிட சில வருடங்களுக்கு ஒரு தடவை தனது மகள்மாரையும் கூட்டிக்கொண்டு சென்னைக்கு வந்துபோவார். கமலா ஒரு சிறுமியாக தனது பாட்டனாருடன் கடற்கரையில் நடைப்பயிற்சிக்கு செல்வார். 1999 ஆம் ஆண்டில் திடீரென்று காலமான தனது பாட்டனின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள கமலாவினால் இந்தியாவுக்கு வரமுடியாமல் போய்விட்டது. ஆனால், 2009 ஆம் ஆண்டில் மரணமடந்த தனது தாயார் சியாமளாவின் அஸ்தியை சென்னை கடற்கரையில் கரைப்பதற்கு கமலா வந்தார்.

    கடந்தவாரம் " பைடனுக்கான தெற்காசியர்கள் " என்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது சென்னையில் தனது நாட்கள் குறித்து கமலா பேசினார்." நாங்கள் வளர்ந்துவந்து கொண்டிருந்தபோது எனது தாயார் என்னையும் சகோதரி மாயாவையும் மட்ராஸுக்கு கூட்டிச்சென்றார். தான் எங்கிருந்து வந்தவர் , எமது மரபுரிமை எங்கே இருக்கிறது என்பதை என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும் என்று விரும்பியதனாலேயே அவர் அவ்வாறு செய்தார். உண்மையில், நல்ல இட்லியில் எமக்கு அவர் விருப்பத்தை ஏற்படுத்தவே அவர் எப்போதும் ஆசைப்பட்டார்" என்று கமலா நினைவுமீட்டினார்.

    தனது குடும்பத்தின் இந்தியப் பக்கத்துடனான பிணைப்புக்களை கமலா மிகவும் இறுக்கமாகவே தொடர்ந்தும் வைத்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் கமலா செனட்டராக பதவியேற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக குடும்பத்தவர்கள் வாஷிங்டனுக்கு சென்றார்கள்.

   " நாம் இயல்பாகவே பெருமைப்படுகின்றோம். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இது பெருமகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது" என்று டில்லியில் வசிக்கும் கமலாவின் தாய்மாமனார் ஜி.பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

( கார்டியன் பத்திரிகையில் தெற்காசிய நிருபர் ஹன்னா எலிஸ் பீட்டர்சன் எழுதியது)