புத்தளம் கற்பிட்டி, வெள்ளந்தீவு பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 1396 கிலோகிராம் மஞ்சள் நேற்று சனிக்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி 43 இலட்சத்து 19 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.

குறித்த மஞ்சள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சொகுசு கார் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம்   தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.