(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்க கணக்கறிக்கையில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சிற்கு 177 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஒருவர் இல்லாத அமைச்சிற்கு எதற்கு 177 பில்லியன் நிதி ஒதுக்கீடு என சபையில் கேள்வி எழுப்பினார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக, பெரும்பான்மை அதிகாரம் உள்ளது என்பதற்காக நினைத்தால் போல் செயற்பட முடியாது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம் எனவும் அவர் ஆளும் தரப்பை எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரச இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் 72 ஆண்டுக்கால சுதந்திர அரசியலில் முதல் தடவையாக வரவு செலவுத்திட்டம் ஒன்று இல்லாது பயணிப்பதாக கூறப்படுகின்றது. எது எவ்வாறு இருப்பினும் இரண்டு இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் 31 ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 1 ஆம் திகதி வரையில் பாராளுமன்றம் இல்லாத காலத்தில் எவ்வாறு  நிதி கையாளப்பட்டது. நாடு முடக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அரசியல் அமைப்பு முடக்கப்பட முடியாது. எவ்வாறு இந்த காலத்தில் அரச நிதி கையாளப்பட்டது, எவ்வளவு தொகை கையாளப்பட்டது. இது மக்களின் பணம், செலவுகளுக்கான கணக்கை மக்களுக்கு காட்டியாக வேண்டும். திறைசேரியில் நினைத்தால்போல் கைவைக்க முடியாது.

அரசியல் அமைப்பின் 150 (3) சரத்திற்கு அமைய பாராளுமன்றம் கூடி மூன்று மாதங்களுக்கு ஜனாதிபதியினால் அரச நிதியை கையாள முடியும். ஆகவே இப்போது இடைக்கால கணக்கறிக்கை ஒன்று அவசியமில்லை. நேரடியாக நவம்பர் மாதத்தில் வரவு செலவு திட்டத்தை கொண்டுவர முடியும். ஆனால் ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்டம்பர் வரையில் பாராளுமன்ற அனுமதி இல்லாது ஜனாதிபதியினால் அரச நிதியை கையாள முடியாது, ஆனால் இவர்கள் திறைசேரி நிதியை கையாண்டது மட்டுமல்லாது சர்வதேச கடன்களும் பெறப்பட்டுள்ளது. 

இதற்கு எந்தவித அனுமதியும் இல்லை. ஆகவே அதிகாரம் உள்ளது என்பதற்காக நினைத்தால் போல் செயற்பட முடியாது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அரசியல் அமைப்பை மீறி செயற்படும் அதிகாரம் உங்கள் எவருக்கும் இல்லை. என்ன அதிகாரம் இருந்தாலும் அரசியல் அமைப்பிற்கு கட்டுப்பட்டாக வேண்டும். எனவே விசேட சட்டம் ஒன்றினை கொண்டுவன்தேனும் குறித்த இடைக்காலத்திற்கான செலவுகளுக்கு பொறுப்பு கூற வேண்டும்.

இந்த இடைக்கால கணக்கறிக்கையில் அரச செலவு 1745 பில்லியனாக உள்ளது, இதில் கடன் மாத்திரம் 1300 பில்லியன் பெறப்படுகின்றது. அரச செலவில் 75 வீதம் கடனில் தங்கியுள்ளது. அரசாங்கத்தின் நாளாந்த வருமானம் 2.7 பில்லியன் டொலர்கள், ஆனால்  நாளுக்கான செலவு 14.5 பில்லியன் டொலர்கள். 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளாந்தம் கடன் பெறவேண்டியுள்ளது. இதுவா அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை. 

19 ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவந்ததன் நோக்கம் அமைச்சுக்களை கட்டுப்படுத்தவே, ஆனால் இன்று இராஜாங்க அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கறிக்கையில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சிற்கு 177 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஒருவர் இல்லாத அமைச்சிற்கு எதற்கு 177 பில்லியன் நிதி ஒதுக்கீடு.  இதே போன்று அமைச்சுக்களுக்கு பொறுப்பாக அமைச்சர்களை நியமிக்கவில்லை, அமைச்சுகளுக்கு பொறுப்பாக நிறுவனங்களும் இல்லை. ஜனாதிபதி தொடர்ச்சியாக அரசியல் அமைப்பை மீறிக்கொண்டுள்ளார் என்றார்.