கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த, காங்கிரஸ் எம்.பி.,யும், தொழிலதிபருமான வசந்தகுமார், தனது 70 ஆவது வயதில் நேற்று காலமானார். 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அகஸ்தீவரத்தில், 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி ஹரிகிருஷ்ண பெருமாள் நாடார் - தங்கமணிக்கு மகனாக, வசந்தகுமார் பிறந்தார்.

பெற்றோருக்கு, ஏழாவது இரட்டை பிள்ளைகளில், ஒருவராக பிறந்தார். நாகர்கோவில் விவேகானந்தா கல்லுாரியில், பி.யு.சி., பட்டம், தென் திருவிதாங்கூர் ஹிந்து கல்லுாரியில், எம்.ஏ., தமிழ் பட்டம் பெற்றார்.

தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், நடிகர் விஜய் வசந்த், வினோத்குமார் என்ற இரு மகன்களும், தங்கமலர் என்ற மகளும் உள்ளனர். 

தன் அண்ணனும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான குமரி அனந்தன், தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு தேர்தல் பணி செய்வதற்காக, சென்னைக்கு வசந்தகுமார் வந்தார். வி.ஜி.பி., நிறுவனத்தில், விற்பனையாளராக பணியில் அமர்ந்தார்.

சைக்கிளில் வீடு வீடாகச் சென்று, வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்தார். இவரது அயராத உழைப்பால், கிளை மேலாளராக உயர்ந்தார். பின், 1978ல், 'வசந்த் அன் கோ' என்ற வீட்டு உபயோகப் பொருட்கள் கடையை, சொந்தமாக ஆரம்பித்தார்.  படிப்படியாக, தமிழகம் முழுதும் பல கிளைகளை உருவாக்கி, பிரபலமான நிறுவனமாக அதனை வளர்த்தார். தன் பெயரில், 'வசந்த் டிவி' நிறுவனத்தையும் ஆரம்பித்தார்.

சாதாரண கடை ஊழியரும், உழைப்பால் உயர முடியும் என்பதை, தன் சொந்த வாழ்க்கையில் நிரூபித்தவர். காமராஜர் மீதுள்ள பற்று காரணமாக, மாணவர் பருவத்தில், காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் பதவி வகித்தார். தமிழக காங்கிரஸ் வரலாற்றில், முதல் முறையாக, வர்த்தகப் பிரிவு என்ற அமைப்பை, வசந்தகுமாருக்காக சோனியா உருவாக்கினார். அப்பிரிவின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றினார்.

தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர், துணைத் தலைவர், செயல் தலைவர் பதவிகளையும் வகித்துள்ளார். 

கடந்த, 2001 இல் நடந்த, சென்னை மேயர் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, குறைந்த வாங்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்தார். 2006 இல் நடந்த சட்டசபை தேர்தலில், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தார். 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் தோல்வி அடைந்தார். 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்றார். பின், 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில, 412 கோடி ரூபாய் சொத்து விபரத்தை அறிவித்து, கன்னியாகுமரி தொகுதியில், 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். லோக்சபாவில், அதிக கேள்விகளை கேட்ட எம்.பி., பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.

மாணவர்களின் முன்னேற்றத்திற்காக, வசந்தகுமார் எழுதிய, 'வெற்றிப் படிக்கட்டு' என்ற நுாலை, நடிகர் ரஜினி வெளியிட்டார். அரசியல், தொழிலில் ஏற்படும் வெற்றி, தோல்வியை சரிசமமாக கருதி, சிரித்த முகத்துடன் காணப்படும் வசந்தகுமார், கட்சித் தொண்டர்களால், 'புன்னகை மன்னன்' என, அழைக்கப்பட்டார்.

கொரோனா ஊரடங்கின்போது, தி.மு.க.,வின், 'ஒருங்கிணைவோம்' திட்டத்திற்கு இணையாக, கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு, தன் சொந்த செலவில், கிலோ கணக்கில் அரிசி மற்றும் மளிகை பொருட்களையும், நிவாரண உதவிகளையும், வீடு வீடாக வழங்கி, தொகுதி மக்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

இந்த மாத ஆரம்பத்தில், சென்னை, சைதாப்பேட்டை சின்னமலை அருகில் நடந்த காங்கிரஸ் போராட்டமே, அவர் கடைசியாக பங்கேற்ற போராட்டமாக அமைந்தது. அப்போராட்டத்தில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது, தொண்டர்களுடன் தொண்டராக அமர்ந்து, மதிய உணவு சாப்பிட்டார்.

ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள, தனியார் வைத்தியசாலையில், சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று குணமடைந்த நிலையில், நிமோனியா காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அது பலன் அளிக்காமல், நேற்று இரவு, 7:00 மணிக்கு மரணம் அடைந்தார். 

வசந்தகுமார் மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழக முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இதேவேளை, வசந்தகுமாரின் திடீர் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வணிகம் மற்றும் சமூகச் சேவையில், அவரது ஈடுபாடு, என்னை பிரமிக்க வைத்தது. அவருடன் உரையாடியபோது, தமிழகத்தின் வளர்ச்சி மீது, அவருக்கு இருந்த அக்கறையையும், ஆர்வத்தையும் தெரிந்து கொண்டேன். அவரது குடும்பத்தினருக்கு, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.