அரசாங்கத்தால் பதுளை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான நியமனங்களில், தகுதி இருந்தும் உள்ளடக்கப்படாதவர்கள் தொடர்பில் பதுளை மாவட்ட அமைச்சர்கள் மீள் பரிசீலனை செய்து, அவ்வாறு உள்ளடக்கப்படாதவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்க முடியும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதாவது, பல்கலைகக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் முதல் பட்டம் ஒன்று அல்லது அதற்குச் சமனான அல்லது மாற்றுத் தகைமையாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் டிப்ளோமா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்றவர்களும் அரசாங்க தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பித்திருந்தார்கள். ஆனபோதிலும் அவர்கள் அனைவரும் இதில் உள்ளடக்கப்படவில்லை.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கென இதுவரை அரசாங்க தொழில்வாய்ப்புக்கான நேர்முகப் பரீட்சை பிரத்தியேகமாக இடம்பெறவில்லை. மாறாக பொதுவாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்றன.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஏனைய பட்டதாரிகள் மாற்று வழியின்றி உள்ளனர்.

ஊவா மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களாக இயங்கி வந்தவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்தவுடன் அவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வாறானவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு வழங்குவதில் எந்தவித தடையும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.

பதுளையில் எதிர்க்கட்சியிலிருந்து தெரிவான தமிழ் பிரதிநிதிகளால் பத்திரிகையில் அறிக்கையும் பாராளுமன்றத்தில் குரலும் மாத்திரமே எழுப்ப முடியும். அவர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாது. 

ஆதலால் பதுளை மாவட்ட அமைச்சர்கள் இந்த விடயத்தை மறு பரிசீலனை செய்து நியமனங்கள் பெற்றுத்தரும் பட்சத்தில் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியும்.