புதிய தேர்தல்முறை மாற்றமானது தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் இருப்பை, பிரதிநிதித்துவத்தை பாதிக்காத வகையிலேயே முன்னெடுக்கப்படவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான  இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும்,"கண்டி மாவட்டத்திலிருந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டாவது தடவையும் அதிஉயர் சபைக்கு தெரிவாவது இதுவே முதன்முறையாகும். எனவே, தமிழ் பேசும் சமூகமாக ஒன்றிணைந்து எனக்கு வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும், எந்தவொரு சட்டத் திருத்தத்தையும் மேற்கொள்வதற்கான பெரும்பான்மைப் பலத்தை  9ஆவது பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி கொண்டுள்ளது. எனவே, அந்த பலத்தை ஆளுந்தரப்பு எவ்வாறு, எதற்காக பயன்படுத்தப்போகின்றது என்பதே பிரதான கேள்வியாகும்.

அதேவேளை, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் எனவும், 13ஆவது திருத்தச்சட்டம் மறுசீரமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக புதிய அரசியலமைப்பில் புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.