(செய்திப்பிரிவு)

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அணிவிக்கப்பட்டது. 

முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உப்புல் பெரேராவினால் முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.

உலகப் போரில் உயிரிழந்த படை வீரர்களை நினைவு கூர்ந்து இலங்கை முன்னாள் படை வீரர்களின் சங்கம் 1944 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பொப்பி மலர் தினத்தை ஏற்பாடு செய்து வருகிறது.

இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் யுத்தத்தில் இறந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கும் அங்கவீனமுற்ற படை வீரர்களின் நலன் பேணலுக்காகவும் செலவிடப்படுகிறது.

இலங்கை முன்னாள் படை வீரர்கள் சங்கம் கொவிட்-19 நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபா நன்கொடையை ஜனாதிபதியிடம் கையளித்தது. 

சங்கத்தின் பொதுச் செயலாளர் கேர்ணல் அஜித் சியம்பலாப்பிட்டிய , பொருளாளர் மேஜர் ஷாந்திலால் கங்கானம்பகே பொப்பி நினைவு தினக்குழுவின் தலைவர் கப்டன் குமா கிரிந்தே ஆகியோர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.