தென் சீனக் கடலில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை (கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை) சீன சோதனை செய்வது பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பாரசெல் தீவுகளைச் சுற்றியுள்ள இராணுவப் பயிற்சிகளின் போது சீனா நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது என்று பென்டகன், தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரிய கடல்களில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கான நாட்டின் 2002 உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாகவும் பென்டகன் குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த தசாப்தத்தில், தென் சீனக் கடலில் பல சர்ச்சைக்குரிய சோதனைகளையும் இராணுவ நிறுவல்களையும் சீனா உருவாக்கியுள்ளது. 

வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்வான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளும் குறித்த கடற்பகுதிகளுக்கான கடல்சார் உரிமைகோரல்களைக் கொண்டுள்ளதாகவும் பென்டகன் சுட்டிக்காட்டியுள்ளது.