(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் மீண்டும் சபையில் எதிர்ப்புக் கருத்துக்களை பதிவு செய்தனர். தமிழ் மொழிபேசும் தமிழினம் இந்த பூமியின் பூர்வீக உரித்துடையவர்களா? இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா? தேசத்துரோக கருத்துக்களை முன்வைத்து சபையில் உரையாற்றிய வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனை உடனடியாக சபையை விட்டு வெளியேற்றுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையில் போர்க்கொடி தூக்கினர்.

பாராளுமன்ற அமர்வுகள் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடிய வேளையில் ஆரம்பத்திலேயே சபையில் சர்ச்சை வெடித்தது. கடந்த பாராளுமன்ற அமர்வுகளின் போது வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறிய கருத்துக்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் தொடர்ச்சியாக எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையில் சர்ச்சையை ஏற்படுத்தினர். 

இதன்போது முதலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி :- " கடந்த வாரம் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் சபையில் முன்வைத்த கருத்தை ஹன்சார்டில் இருந்து நீக்க வேண்டும் என்ற காரணிகளை நாம் சபையில் முன்வைத்திருந்தோம். இந்த நாட்டின் பூர்வீகம் தமிழர்கள் என கூறிய விடயத்தை நீக்க வேண்டும் என கூறியிருந்தேன். ஆனால் விக்கினேஸ்வரனின் கருத்து ஹன்சாட்டில் பதியப்பட்டுள்ளது. இது எவ்வாறு சாத்தியமாகும் " என தெரிவித்தார்.

இதற்கு பதில் தெரிவித்த சபாநாயகர் :- " இது ஒழுங்குப்பிரச்சினை அல்ல, உங்களுக்கு ஏதேனும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் உங்களின் நேரத்தில் அதற்கான மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கலாம்" என்றார்.

மீண்டும் மனுஷ எம்.பி :- "இது ஒழுக்கு விதிகளுக்கு முரணானது அல்லவா, இது சட்டத்திற்கு முரணான கருத்தாகும். இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன. அவர் கூறியது சரி என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றீர்களா" என்றார்.  

சபாநாயகர் :- "அவரது கருத்து முரணானதல்ல. பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு அமைய சகல உறுப்பினர்களுக்கும் அவரவர் கருத்துக்களை முன்வைக்க உரிமை உள்ளது. இதில் அரச நிலைப்பாடு, எதிர்க்கட்சி நிலைப்பாடு என ஒன்றும் இல்லை, யாருக்கும் தமது சுய கருத்துக்களை சபையில் முன்வைக்கும் உரிமை உள்ளது" என்றார்.  இதனை அடுத்து சபையில் ஐக்கிய மக்கள் சக்தி கூச்சலிட்டு வன்மையான கருத்துக்களை முன்வைத்தனர் . " அரசியல் அமைப்பினை மீறி பேசியுள்ள இந்த கருத்து ஜனநாயகத்திற்கு முரணானது. இதனை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது, இந்த நாட்டில் தமிழ் மொழி பிரதான மொழி அல்ல, தமிழர்களை பூர்வீக குடிகளென அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா? ....".என கூச்சலிட்டனர்.

இதன்போது ஆளும் தரப்பு உறுப்பினர் சாந்த பண்டார ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி:- "குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கூறிய காரணிகள் தொடர்பில் ஆராய்வதாக நீங்கள் சபையில் அறிவித்தீர்கள், இதற்கு முன்னரும்  இவ்வாறான தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய சந்தர்ப்பங்களில் குறித்த கருத்துக்கள் ஹன்சார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கருத்தும் நீக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் " என்றார்.

இதன்போது சபாநாயகர் :- முடியாது,

ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஹகீம்எம்.பி  :- "பாராளுமன்ற சிறப்புரிமை சட்டத்திற்கு அமைய சகலருக்கும் கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. நாட்டின் சட்டத்திற்கு முரணான காரணிகள் சபையில் கூறப்படுகின்றது என்றால் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு அது குறித்த நடவடிக்கை எடுக்க முடியும். மாறாக ஒருவரது சிறப்புரிமையை இந்த சபை மீறமுடியாது. இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் வழங்கியுள்ள தீர்மானம் முற்றிலும் சரியானது"  என்றார்.

இதன்போது மீண்டும் சபையில் கூச்சலிட்ட மனுஷ நாணயகார எம்.பி :-" நீங்கள் தவறான முன்னுதாரணமாக செயற்பட வேண்டாம், கருத்து தெரிவிக்க எனக்கு இடமளியுங்கள்" என கூறினார்

சபாநாயகர் :- "நீங்கள் எமது நேரத்தை வீணடிக்காது உங்களின் ஆசனத்தில் அமருங்கள் "என்றார். இதன்போது மீண்டும் சஜித் தரப்பினர் கூச்சலிட்டனர். "இந்த பூமி தமிழர்களின் பூமி என்பதை ஏற்றுக்கொள்வதா உங்களின் நிலைப்பாடு அதனை மட்டும் கூறுங்கள்" என்றனர்.

இந்நிலையில்தொடர்ச்சியாக  ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய நளின் பண்டார எம்.பிக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது :- "இந்த நாட்டில்  இனவாதம், பிரிவினைவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம் என சாத்தியப்பிரமாணம் செய்துகொண்டோம். ஆனால் இதற்கு முரணான விதத்தில் விக்கினேஸ்வரன் எம்.பி செயற்பட்டுள்ளார். அவர் தேசத்துரோக கருத்தினை முன்வைத்துள்ளார். அதற்கமைய அவரை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதனை நீங்கள் எவ்வாறு ஏற்றுகொள்ள முடியும். இனவாதத்தை உருவாக்குகின்ற காரணிகள் இது" என்றார்.

சபாநாயகர் :-" இது ஒழுங்குப்பிரச்சினை அல்ல. நீங்கள் அமைதியாக இருங்கள்" என்றார் . இதன்போது சபையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூச்சலிட்டு விக்கினேஸ்வரனுக்கு எதிராக கூச்சலிட்டனர். சபையில் தனியாக அமர்ந்திருந்த விக்கினேஸ்வரன் எம்.பி இவற்றையெல்லாம் வேடிக்கை  பார்த்துக்கொண்டிருந்தார்.