(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கோப் , மற்றும் கோபா குழுக்களின் தலைமை பொறுப்புகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கே வழங்கப்பட வேண்டும், சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கும் அரசாங்கம் என்றால் இவற்றை எமக்கு தாருங்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையில் அடம்பிடித்தனர். 

இதற்கு பதில் தெரிவித்த பிரதமர் பொது நிறுவனங்கள் தொடர்பிலான பாராளுமன்ற குழுக்களான "கோப்" மற்றும் அரச கணக்காய்வு குழு "கோபா" ஆகியவற்றின் தலைமைப் பதவிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவின் மூலமாக  தீர்மானிக்கப்படுமென பதிலளித்தார்.

கோப் மற்றும் கோபா குழுக்களின் பதவிகள் தொடர்பில் பாராளுமன்றில் இன்று வியாழக்கிழமை ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, குறித்த பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்க சபாநாயகர் நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதலளித்த சபாநாயகர், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கடந்த பாராளுமன்றத்தில் கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப் பதவிகள் எதிர்க்கட்சியினருக்கே வழங்கப்பட்டன . பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயமும் இதுதான். 

அதேபோல் பொதுநலவாய அமைப்பின் உறுப்பினர்கள் என்ற விதத்திலும் இந்த சம்பிரதாயம் தெரிந்திருக்க வேண்டும். இதனை  நாம் கடைப்பிடிக்கிறோம். அதன் பிரகாரம் கடந்த அரசாங்கம் இவ்வாறு குறித்த பதவிகளை எதிர்க்கட்சியினருக்கு வழங்கியிருந்தது. ஆகவே, குறித்த இரு பதவிகளும் எதிர்க்கட்சியினருக்கு வழங்க நடவடிக்கையெடுக்கப்படுமா என பிரதமர் பதிலைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர்.

இதன்போது சபையில் ஆளுங்கட்சியின் முன்வரிமையில் அமர்ந்த்திருந்த  பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ  மற்றும் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன இருவரும் பதில் கூறுவதில் சங்கடப்பட்டனர். இதன்போது பதில் கூறியசபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன : சபாநாயகர் ஆரம்பத்தில் கூறிய பதிலே என்னிடமும் உள்ளது. தெரிவுக்குழுவில் வாக்கெடுப்பு நட்டத்தி தீர்மானிக்க முடியும் என்றார். மீண்டும் பதில் கூறிய சபாநாயகர் :- தெரிவுக்குழுவில் இதுகுறித்து கலந்துரையாடி தீர்மானிப்போம் என்றார்.

இது குறித்து ஆளும் தரப்பு எம்.பி.யான எஸ்.பி. திசாநாயக்க கூறுகையில், ரணில் ஆட்சியில் 'கோபா' தலைவராக  அமைச்சராகவிருந்த லசந்த அழகியவன்ன இருந்தார்  என்பதனை நினைவூட்டுகின்றேன் என்றார். இது தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு என்னவென எதிர்க்கட்சி தலைவர்   சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். 

இதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச   பதிலளிக்கையில்,பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இதுகுறித்து தீர்மானிக்கப்படும். சில சந்தர்ப்பங்களில் ஆளும் தரப்பில் உள்ளவர்களும் சில சந்தர்ப்பங்களில் எதிர்தரப்பில் உள்ளவர்களும் இந்தப் பதவிகளை வகித்துள்ளனர். ஆகவே, பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவின் பிரகாரம் குறித்த தலைமை பதவிகளுக்கு நியமனங்களை செய்வோம் என்றார்.