(நா.தனுஜா)

அரசாங்கத்திற்கு உள்ள வழமையான செலவுகளை விடவும் இம்முறை கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்கவேண்டிய தேவையும் இருக்கின்றது. 

எனவே செலவுகளை ஈடுசெய்வதற்கான நிதி எம்மிடம் இல்லாதபோது, அதற்காகக் கடன்களைப் பெறவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. 

அதன் விளைவாகவே எதிர்வரும் நான்குமாத காலத்திற்கான  இடைக்கால கணக்கறிக்கையின்படி குறித்தளவான செலவுகளை ஈடுசெய்வதற்கு கடன்பெறத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. 

இவ்வாண்டின் எதிர்வரும் நான்கு மாதகாலத்திற்குரிய செலவினங்களுக்காக அரசாங்கம் சமர்ப்பித்திருக்கும் இடைக்காலக் கணக்கறிக்கை தொடர்பில் இச்சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது.

குறிப்பாக நான்குமாத காலத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பெருமளவான தொகையை கடனாகப் பெறுவதற்குத் திட்டமிட்டிருப்பது பற்றியும் வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில பின்வருமாறு குறிப்பிட்டார்:

எதிர்வரும் நான்குமாத காலத்திற்கான இடைக்காலக் கணக்கறிக்கை என்றாலும்கூட அரசாங்கத்திற்குப் பல்வேறு செலவுகள் இருக்கின்றன. 

அரச ஊழியர்களுக்கான சம்பளக்கொடுப்பனவு, அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் என்பவற்றோடு கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் மக்களுக்கான நிவாரணங்களை வழங்கவேண்டிய தேவையும் இருக்கின்றது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் நேரடிவரி வருமானம் 20 சதவீதத்தை விடவும் குறைவானதாகவே இருக்கின்றது. 

எனவே செலவுகளை ஈடுசெய்வதற்கான நிதி எம்மிடம் இல்லாதபோது கடன்பெற வேண்டிய தேவையேற்படுகின்றது. அந்தக் கடன்களை எவ்வாறு பெற்றுக்கொள்வதென்பது தொடர்பிலும் உரிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்.