புத்தளம் மற்றும் புத்தளத்தை அண்மித்த பகுதிகளில் பச்சைப் பாக்கு ஒன்று 25 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக வெற்றிலை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் பாக்கு ஒன்று 5 ரூபா முதல் 8 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ள போதிலும், சந்தையில் பாக்கின் விலை அதிகரித்துள்ளமையினால், புத்தளத்தில் தற்போது சிறிய பாக்கு 18 ரூபாவுக்கும், பெரிய பாக்கு ஒன்று 25 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், முன்னர் நாளொன்றுக்கு 1000 பாக்குகளை விற்பனை செய்த தாங்கள், தற்போது 200 தொடக்கம் 300 வரையிலான பாக்குகளையே விற்பனை செய்து வருவதாகவும், இதனால் தாம் பொருளாதார ரீதியில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வெற்றிலை கூரு ஒன்று, தற்போது 45 ரூபா முதல் 50 ரூபா வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

முன்னர், வெற்றிலை கூரு ஒன்றில், நான்கு வெற்றிலைகள், இரண்டு பாக்கு, புகையிலை மற்றும் சுன்னாம்பு என்பன வைக்கப்பட்டு 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

எனினும், பாக்கின் விலை வெகுவாக உயர்ந்துள்ளமையினால், பழைய விலைக்கு வெற்றிலை கூரு விற்பனை செய்ய முடியாமல் 10 ரூபாவால் வெற்றிலைக் கூரின் விலையையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் வெற்றிலை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, வெற்றிலைக் கூரின் விலை அதிகரித்துள்ளமையினால் வெற்றிலை கூருகளை கொள்வனவு செய்யும் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.