(எம்.ஆர்.எம்.வஸீம்)

தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க தடையாக இருந்துவரும் தொழில் கட்டளைச்சட்டங்களில் இருக்கும் பலவீனங்களை நீக்கி திருத்தங்களை கொண்டுவர தீர்மானித்துள்ளோம். திருத்த சட்டமூலத்தை ஒருவாரத்துக்குள் அமைச்சின் செயலாளருக்கு ஒப்படைக்கவும் ஆலாேசனை வழங்கி இருக்கின்றோம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

தொழில் திணைக்கள அதிகாரிகளுடன் தொழில் அமைச்சில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் எட்டப்பட்ட தீர்மானங்கள் குறித்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஊழியர் சேமலாப நிதி சட்டத்துக்கு அமைவான  பங்களிப்பு தொகை வழங்காமை வழக்குகளை தொழில் நியாயாதிக்க சபைக்கு அனுப்புவதற்கு தேவையான முறையில் அந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்காெள்ள இருக்கின்றோம். அதேபோன்று தொழில் நியாயாதிக்க  சபை வழங்கும் உத்தரவுகளை தொழில் நியாயாதிக்க சபை ஊடாகவே அதனை அமுலாக்கும் வகையில் சட்ட திருத்தங்களை கொண்டுவர இருக்கின்றோம்.

மேலும் உபகார கொடுப்பனவு சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொண்டு, அந்த கொடுக்கல்கள் தொடர்பான வழக்குகளையும் தொழில் நியாயாதிக்க  சபைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மேலதிகமாக சம்பள சபை கட்டளைச்சட்டம், கடை மற்றும் காரியாலய சேவை சட்டம் மற்றும் 2016 பாதீட்டு கொடுப்பனவு சட்டத்துக்கு கீழ் அறவிடப்படும் வழக்குகளும் தொழில் நியாயாதிக்க  சபைகளுக்கு பொறுப்பாக்கும்  வகையிலான சட்ட திருத்தம் மிக விரைவில் கொண்டுவர இருக்கின்றோம்.

மேலும் தொழிற் சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த ஊழியர் இழப்பீட்டு கட்டளைச்சட்டத்தின் கீழ் தற்போது செலுத்தப்பட்டுவரும் 5இலட்சத்தி 50ஆயிரம் ரூபா இழப்பீட்டை 20இலட்சம் ரூபாவரை அதிகரிப்பதற்கும், இந்த இழப்பீட்டு வழக்கை விசாரணை செய்யும் அதிகாரத்தை தொழில் நியாயாதிக்க சபைக்கு ஒப்படைக்க தேவையான திருத்தங்களையும் கொண்டுவர இருக்கின்றோம். தற்போது இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் நீதிவான் நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் இருப்பதால், பயனாளிகளுக்கு  விரைவாக நியாயத்தை பெற்றுக்கொடுப்பதே  இதனை மேற்கொள்ள பிரதான காரணமாகும்.

குறிப்பிட்ட இந்த திருத்தங்கள் தொடர்பாக கலந்துரையாடலுக்கு வந்திருந்த தொழில் திணைக்கள அதிகாரிகளும் ஆணையாளர்களும் இந்த சட்ட திருத்தங்களை மேற்கொள்வது பிரயோசனமான நடவடிக்கை என இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்கள். அத்துடன் இந்த சட்ட திருத்த சட்டமூலத்தை ஒருவாரத்துக்குள் அமைச்சின் செயலாளருக்கு பெற்றுக்கொடுக்குமாறு தொழில் ஆணையாளர் நாயகத்துக்கு ஆலாேசனை வழங்கியுள்ளேன் என்றார்.