வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் பலத்த பருவகால மழை பெய்துவருவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

வடக்கு பர்வான் மாகாணத்தில் வெள்ளத்தால் புதையுண்ட வீடுகளில் சிக்கியவர்கர்ளை மீட்கும் பணியில் மீட்பு குழு ஈடுப்பட்டுள்ளது.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது. குறித்த மாகாணத்தில் குறைந்தது 66 பேர் உயிரிழந்துள்ளதுடன்  90 பேர் காயமடைந்துள்ளனர்.

மாகாண வைத்தியசாலையின் தலைவர் அப்துல் காசிம் சாங்கின் கூறுகையில்,

உயிரிழந்தவர்களில்  பலர் குழந்தைகள் எனவும் காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி விடுத்துள்ள அறிக்கையில், பர்வான் மற்றும் பிற மாகாணங்களுக்கு உதவி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பர்வானில் குறைந்தது 300 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த மாகாணத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். 

கிழக்கு நூரிஸ்தான் மாகாணத்திலுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.