(ஆர்.ராம்)

திருகோணமலைக்கு இன்று செல்லும் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், அம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்திக்கவுள்ளார். 

திருகோணமலை கூனித்தீவில் உள்ள பாடசாலைக் கட்டட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லஸ் கலந்து கொள்கின்றார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்லத்தும் பங்கேற்கவுள்ளார். 

இந்த திறப்பு விழா நிகழ்வு காலை 8.45 இற்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு நிறைவடைந்தவுடன் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லஸ் அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் நடைபெறும் முதலாவது சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.