(எம்.மனோசித்ரா)

சில மோசடிக்காரர்கள் தொலைபேசி அழைப்புக்கள் , குறுஞ்செய்திகள் , மின்னஞ்சல்கள் , சமூக ஊடகப் பிரயோகங்கள் , அளவலாவல்கள் போன்றவற்றை உபயோகித்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நேற்று திங்கட்கிழமை சுங்க திணைக்கள அதிகாரிகளால் கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கருகில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

வழங்கப்பட்ட துண்டு பிரசுரங்களில் , இது போன்ற மோசடிகளால் பாதிக்கப்படுபவர்கள் பெருந்தொகை பணத்தை இழப்பதுடன் மன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர்.

இவ்வாறான மோசடிக்கார்கள் இலங்கை சுங்கத்தின் முகவரியிடப்பட்ட கடிதத்தாள்களையும் தொலைபேசி இலக்கங்களையும் உபயோகிப்பதோடு தாம் உண்மையானவர்கள் என்று நம்பச் செய்வதற்காக சில சந்தர்ப்பங்களில் சுங்க அதிகாரிகளின் பெயர்களைக் கூட பயன்படுத்துகின்றனர்.

இலங்கை சுங்கமானது இனந்தெரியாதோரின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்புச் செய்யுமாறு பொது மக்களுக்கு ஒருபோதும் அறிவிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.