(செய்திப்பிரிவு)

காலி, அக்மீமன மற்றும் தனமல்வில பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்மீமன

அக்மீமன - காலி - மாபலகம வீதியில் திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

லபுதுவ பகுதிக்கு அருகில்  மாபலகம நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று தனியார் பஸ்ஸொன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை 

பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அக்மீமன பகுதியைச் சேரந்த 27 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விபத்துக்கு காரணமாக தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தனமல்வில

தனமல்வில - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில்  இருவர்  உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

கித்துல்கோட்டே - நெலுவயாய சந்தியில் தனமல்வில நோக்கி சென்ற கெப் வாகனமொன்று எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் பின்னாலிருந்து சென்றவர் இருவரும் தனமல்வில வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகி;ச்சை பலனின்றி இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

செவனகல பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 17 வயதுடைய நபர்களே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பில் கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.