(எம்.எப்.எம்.பஸீர்)

இரண்டாவது புவனேகபாகு மன்னரின் அரசவை காணப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்த பழைமை வாய்ந்த கட்டடத்தை சேதப்படுத்தியமை தொடர்பில், குருணாகல் மாநகர  மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண உள்ளிட்ட ஐவரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை அமுல்படுத்துவதா? இல்லையா என்பது தொடர்பிலான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இந் நிலையில் குருனாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட சந்தேக நபர்கள் ஐவரை கைது செய்யுமாறு, குருனாகல் நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 7ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அமுல்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை இன்று (25) வரை நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தம்மை கைது செய்ய குருணாகல் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி, குருணாகல் மாநகர  மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண உள்ளிட்ட ஐவரும் மேன் முறையீட்டு நீதிமன்றில்  ரீட் மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.  

அம்மனுக்களில் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரணங்களை வழங்குவதா, மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா என மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்மனைக்க இருந்தது. அதற்காக அம்மனுக்கள் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. ந்வாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது.

இதன்போது, அது குறித்த தீர்மானம் தயார் செய்யப்படாமையால், குறித்த மனுவினை இன்று வரை ஒத்தி வைக்கவும், இன்றைய தினம் குறித்த மனுக்களை விசாரணைக்கு எர்பதா, மனுதாரர்கள் கோரும் கைதினை தடுக்கும் இடைக்கால உத்தர்வை வழங்குவதா என்பது குறித்து நீதிமன்ற உத்தரவை வெளிபப்டுத்தவும் நடவடிக்கை எடுக்கபப்டும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.