களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை எல்லகந்த தோட்டத்தில் நேற்று இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மூன்று பிள்ளைகளின் தந்தையான முருகையா பாபு (38) என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார். தோட்டத்தில் வசித்து வரும் பெரும்பான்மை குடும்பம் ஒன்றுக்கும் தோட்ட மக்களுக்குமிடையே அடிக்கடி இடம்பெற்று வரும் சண்டை சச்சரவே இந்த மோதலுக்கான காரணம் என கூறப்படுகிறது. மோதலின் போது குடியிருப்பு ஒன்றின் ஜன்னல், கண்ணாடி என்பன சோதமடைந்துள்ளன. 

இச்சம்பவம் தொடர்பாக ஹொரணை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ள போதிலும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. 

இதேவேளையில் நீண்டகாலமாக தொடர்ந்து வரும் இந்த முறுகல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாமையினால் பகைமை வளர்ந்து இனவாதப்போக்கு கையாளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்படுகின்ற போதிலும் தங்களுக்கு நியாயம் கிடைப்பதில்லையெனவும் தோட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலை மேலும் தொடருமாயின் இங்கு பாரிய அனர்த்தம் ஏற்பட இடமுண்டு என தோட்ட மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

எனவே தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும் மொழிகள் அமுலாக்கல் அமைச்சர் மனோ கணேசன் இது குறித்து கவனம் செலுத்தி இங்கு தொடர்ந்து வரும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.