(செ.தேன்மொழி)

நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வை காணுவதற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதற்கான காரணம் என்ன ? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் , பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பினார்.

இதேவேளை அரசியல் இலாபத்தை கருத்திற் கொண்டு அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்க முயற்சித்தால், அதுற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர் கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடணத்தில் எவ்வித அடிப்படையான விடயங்களும் உள்ளடக்கப்பட வில்லை. பொதுவாக கொள்கை பிரகடனங்கள் முன்வைக்கப்படும் போது தற்போதைய சூழ்நிலைகளுக்கேற்பவே முன்வைக்கப்படும் . இந்நிலையில் கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதுடன் , நாட்டு மக்கள் பாரிய வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சவால்களுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் அரசாங்கத்திடம் வேலைத்திட்டங்கள் இல்லாவிட்டாலும் நம்பிக்கையாவது இருக்க வேண்டும்.

ஆனால் , அது தொடர்பில் எதனையும் கூறாது உடனே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவது தொடர்பிலே ஜனாதிபதி கருத்து தெரிவித்திருந்தார். தற்போது நாடு இருக்கும் நிலைமையில் அரசியலமைப்பு திருத்தம் தான் அவசியமானதா? வைரஸ் பரவலின் காரணமாக ஆடை தொழிற்சாலைகள் , உற்பத்தி நிலையங்கள் மற்றும் சுற்றுலாத்துறை போன்ற வர்த்தக நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.  இவற்றை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் அரசாங்கம் எந்த திட்டங்களையும் முன்வைக்க வில்லை. அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மாத்திரமே மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவி காலம் மற்றும் ஒருவர் இரு தடவை மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் , சுயாதீன ஆணைக்குழுக்கள் , தகவலறியும் உரிமை மற்றும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஏற்பாடும் காணப்படுகிறது. ஜனநாயக தன்மைமிக்க நாடொன்றில் காணப்பட வேண்டிய அம்சங்களே இவை. இதனை நீக்குவதன் நோக்கிலேயே அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கம் பேசிவருகின்றது.

அரசாங்கம் 19 ஆவது அரசியலமைப்பில் காணப்படும் ஜனாதிபதியின் பதவிகாலம் மற்றும் இரு தடவைகள் மாத்திரமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சட்டங்களை நீக்கா விட்டாலும், ஏனைய விவகாரங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது சர்வாதிகார போக்கிற்கான முயற்சியாகும். இது மக்கள் ஆட்சியை மேற்கொள்ள விரும்பும் அரசாங்கத்திற்கு பெரும் சிக்கலை தோற்றுவிக்கும். அரசாங்கம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதன் ஊடாக இந்நாட்டு பிரஜைகளையும் , அவர்களது சிவில் உரிமைகளையும் அபகரிப்பதற்கான வாய்ப்பிருக்கின்றது.

ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க முடியாது என்று 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும். கோதாபய ராஜபக்ஷ அதனை கருத்திற் கொள்ளாது பாதுகாப்பு அமைச்சை தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளார். இது அரசியலமைப்பு மீறிய செயற்பாடு என்பதினால் அது தொடர்பில் வர்தமானியிலும் அறிவிக்க வில்லை.

இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் பிழையான அர்த்தத்தை ஏற்படுத்திவிடும். நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் ராஜபக்ஷாக்களுக்கு மாத்திரம் 141 நிறுவனங்களுக்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்றுள்ளதால் , 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பை நீக்கி புதிய  அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அரசியலமைப்பில் சில சிக்கலான ஏற்பாடுகள் காணப்பட்டாலும் அவற்றை மீள் திருத்தம் செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் முழுவதும் மாற்ற முயற்சிப்பதானது , அரசியல் இலாபம் கருதிய செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். இந்நிலையில் சமூகத்தில் பேசப்படாமல் அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சிக்குமே ஆனால் அதற்கு எதிராக நாம் செயற்படுவோம்.

கேள்வி : அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பேசிவருகின்றது. இந்நிலையில் எதிர்கட்சி என்ற வகையில் உங்களது செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும்?

பதில்: அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதாக அறிவித்துள்ள போதிலும்,  அதில் எத்தகைய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் எதுவுமே கூறப்படவில்லை. அதனால் அந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய பின்னரே எமது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களை பாரரளுமன்றம் மற்றும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளவும் , அரச சேவை மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாடுகள் மீது அரசியல் ரீதியிலான தலையீடுகளை மேற்கொள்ளவுமே அரசாங்கம் முயற்சிக்கின்றதா ? என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் முதலில் தெளிவுப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கேள்வி : புதிய அரசியலமைப்பு கொண்டுவரும் போது எதிர்கட்சிக்கு பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுமா?

பதில் : அவ்வாறு பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பு எமக்கு கிடைக்கப் பெற்றால். பாராளுமன்றத்தில் கொண்டவரவிருக்கும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதுடன் , விமர்சனங்களையும் முன்வைப்போம். இந்த விடயம் தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.  இதேவேளை அரசியலமைப்பு திருத்தத்தில் சிக்கலை ஏற்படுத்தும் அளவுக்கு ஏற்பாடுகள் காணப்பட்டால் சிவில் அமைப்புகள் மற்றும்  நாட்டு மக்களுடன் இணைந்து அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக குரல் எழுப்பவும் தயாராக இருக்கின்றோம்.

கேள்வி : 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டாலும். அப்போதைய பிரதமரும் , எதிர்கட்சி தலைவரும் இணைந்தே செயற்பட்டிருந்தனர். இந்நிலையில் சுயாதீன ஆணைக்குழுக்களின் நியமனங்களின் போதும் இருவரினதும் இணக்கத்தின் பேரிலேயே வழங்கப்பட்டது. இந்நிலையில் அது சுயாதீனமாக இயங்கியதாக நீங்கள் எவ்வாறு குறிப்பிடலாம்?

பதில்: சுயாதீன ஆணைக்குழுக்களின் செய்றபாடுகள் சுயாதீனமாக இருந்ததா? என்ற கேள்வி பலர் மத்தியிலும் இருக்கின்றதுதான். அப்படியான சிக்கல்கள் எதுவும் காணப்பட்டால் அவற்றை திருத்திக் கொள்வதற்கே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக முழு அரசியலமைப்பு திருத்தத்தையும் மாற்ற முயற்சிக்க கூடாது.

கேள்வி : சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும், அவர்களால் சுயாதீனமாக தேர்தலை நடத்துவது தொடர்பில் அறிவிக்க முடியாமல் இருக்கின்றதே. இந்நிலையில் சுயாதீனம் என்று கூறுவதில் என்ன பயன் இருக்கின்றது?

பதில் : இது போன்ற சில சிக்கல்கள் காணப்படுகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அதனால், இதில் காணப்படும் சிக்கலான ஏற்பாடுகளில் மாத்திரம் திருத்தங்களை மேற்கொள்வோம் என்று கூறுகின்றேன். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உடனடியாக கொண்டுவரப்பட்டிருந்தாலும். தற்போது அது தொடர்பில் நாம் அனுபவம் பெற்றுக் கொண்டுள்ளோம்.  அதனால் திருத்தங்களை மாத்திரமே செய்வது போதுமானதாக இருக்கும் என்றே நான் எண்ணுகின்றேன்.

கேள்வி : இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஏற்பாட்டை மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக கூறினீர்கள் , அப்படியென்றால் யாரை இணைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது?

பதில் : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபயகர் பசில் ராஜபக்ஷவை இலக்கு வைத்தை அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றது. இது நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எமக்கு ராஜபக்ஷர்களின் மீது தனிப்பட்ட கோபங்கள் எதுவும் இல்லை. அவர்களே தேசப்பற்று தொடர்பில் அதிகளவில் பேசி வருபவர்கள். இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர் எந்த நாட்டுக்காக தனது செயற்பாடுகளை முன்னெடுப்பார் என்பது தொடர்பில் ஒரு நிலையான தீர்மானத்தை எடுக்க முடியாது. எம்.சீ.சீ போன்ற ஒப்பந்தங்கள் கொண்டுவரப்பட்டால் அவர் எந்த நாட்டு சார்பில் செயற்படுவார் என்று உறுதியாக கூறமுடியாது.அதனால்தான் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களை உள்வாங்கக் கூடாது என்கின்றோம்.

கேள்வி : மத்தியவங்கி மற்றும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கடந்த காலங்களில் இந்த இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் நியமிக்கப்பட்டிருந்தன. இதனால் பாதிப்புகளும் ஏற்பட்டிருந்தன. இது நியாயமானது என்றால் பாராளுமன்றத்திற்கு மாத்திரம் ஏன் தடையாக இருக்கின்றது?

பதில் : இதனை நியாயம் என்று நான் ஒரு போதுமே கூறமாட்டேன். ஆனால் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜாவுரிமை உடையவர்களின் உறுப்புரிமை தொடர்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மாகாண சபைகள் மற்றும் அரச துறைகளுக்கு தாக்கம் செலுத்தாது. இவ்வாறு இந்த துறைகள் தொடர்பில் ஏற்பாடுகள் இல்லாமையும்  ஒரு பிழையான நடைமுறையாகும்.

கேள்வி : ராஜபக்ஷர்களை இலக்குவைத்தே அரசியலமைப்பு திருத்தத்தை மாற்ற வேண்டாம் என்று தெரிவிக்கின்றீர்கள். ஐக்கிய தேசியக் கட்சியும் அவ்வாறே இந்த தீர்மானங்களை எடுத்துள்ளது. ராஜபக்ஷர்களின் மீதான அச்சம் காரணமாகவா இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.?

பதில்: இரட்டை பிரஜாவுரிமை விவகாரம் தொடர்பில் இந்நாட்டில் மாத்திரமல்ல ஏனைய வெளிநாடுகளிலும் சட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது ராஜபக்ஷர்களை இலக்குவைத்ததாக அமைந்து விடாது. இந்த சட்டம் உருவாக்கப்பட்டவுடனே பாராளுமன்ற உறுப்பினர் கீத்தா குமாரசிங்கவே அதற்கு இலக்காக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ராஜபக்ஷர்களை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கேள்வி : ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதாக நீங்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த போதிலும் , அவர்கள் அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதற்காக தங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்குமாறு தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில் நாட்டு மக்கள் அவர்களின் வேண்டுகோளுக்கு ஆணை வழங்கியுள்ளனர்?

பதில்: ஆம். நாட்டு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பதற்காக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க முடியாது. எந்த ஒரு தீர்மானமாக இருந்தாலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலேயே மேற்கொள்ள வேண்டும். அதனாலே அது தொடர்பில் நாங்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றோம்.

கேள்வி : நீங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நட்புறவை கொண்டுள்ளீர்கள். இந்நிலையில் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் பிரதமருக்கே அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.அதனால் அதனை நீக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கலாமே?

பதில்: நான் அவருடன் மாத்திரமல்ல , ஏனைய கட்சி தலைவர்களுடனும் , அரசியல்வாதிகளுடனும் நட்பை பேணி வருபவன். ஆனால் , எமக்கென்ற தனியான கொள்கைகள் இருக்கின்றன. ராஜபக்ஷர்கள் இந்த விடயங்கள் தொடர்பில் குடும்பமாக கலந்துரையாடி தீர்மானம் எடுப்பார்கள். அதிகாரம் தொடர்பில் ராஜபக்ஷ சகோதரர்களுக்கிடையில் சிக்கல்கள் காணப்படும் என்று நான் எண்ணவில்லை.