(செ.தேன்மொழி)

ஜனநாயக ஆட்சிமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க முயற்சிப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி , ஜனநாயக ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஏற்பாடுகளை அரசாங்கம் கொண்டு வந்தால் , அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், அதிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு நாடளாவிய ரீதியில் பெறும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதனால் சர்வாதிகார ஆட்சி மற்றும் முழு சமூகமும் அரசியல் தாக்கங்களுக்கு உள்வாங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தது. அந்த கருத்துகளும் கடந்த கால ஆட்சிகளின் போது உறுதிப்படுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கருத்துகள் சமூகத்தில் பேசப்பட்டு வந்தன.அதற்கமைய 1994 ஆம் ஆண்டு தொடக்கம் அனைத்து தேர்தல் பிரசாரங்களின் போதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வந்தன.ஆனால் இது ஒரு போதும் நிறைவேற்றப்பட வில்லை. அதற்கு மாறாக 2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் இருதடவைகள் மாத்திரமே ஒருவர் ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்பட முடியும் என்று இருந்த சட்டம் மாற்றி அமைக்கப்பட்டு.ஒருவர் எத்தனை தடவை வேண்டும் என்றாலும் ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்படலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர். நாட்டின் பிரதம நீதியரசரை ஆளும் தரப்பினர் அவர்களின் விருப்பத்திற்கு பதவியிலிருந்து விலக்கியதுடன் , அவர்களுக்கு ஆதரவான ஒருவரை பிரதம நீதியரசராகவும் நியமித்தனர். ஜனாதிபதி பிரதமர் தலைமையிலான பாராளுமன்றத்தை புறந்தள்ளி வைத்துவிட்டு சர்வாதிகாரம் மிக்க நபராக செயற்பட ஆரம்பித்தார்.

இந்நிலையில் ஜனநாயகத்தை போற்றி செயற்படும் சிவில் அமைப்புகள் மற்றும் மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரர் உட்பட பிக்குகள் சங்கத்தினர் , பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஜனநாயகம் வீதியில் தூக்கி எறியப்பட்டிருந்த காலக்கட்டத்திலேயே இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது.

பின்னர் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஒருவர் இரு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக பதவி வகிக்கு முடியும் என்றும். அவரது பதவிகாலம் 5 வருடங்களுக்கும் உள்ளடக்கப்பட்டது.இதேவேளை பாராளுமன்றத்தை நான்கரை வருடங்கள் வரை கலைக்க முடியாது என்ற ஏற்பாடும் கொண்டுவரப்பட்டது. இதேவேளை ஜனாதிபதியால் எந்த அமைச்சு பொறுப்புகளையும் ஏற்க முடியாது என்ற சட்டம் உருவாக்கப்பட்டது.

மேலும் தகவலறியும் உரிமை, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு , அரசிலமைப்பு பேரவை, பொலிஸ் ஆணைக்குழு , கணக்காய்வு ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு , இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு என்பன ஸ்தாபிக்கப்பட்டதுடன். இதனூடாக ஜனநாயகமும் வென்றெடுக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பாராளுமன்ற முதல் கூட்டத்தொடரில் உரையாற்றியபோது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார். இது ஜனநாயக தன்மைமிக்க ஆட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஜனாதிபதி 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாகவே தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு திருத்தம் செய்யும் போது அது தனியாக கலந்துரையாடப்பட வேண்டிய விடயமாகும். இதனை நீக்க முயற்சிப்பதானது பலமீதான மோகத்தின் காரணமாகும். 

அந்த திருத்தத்தை நீக்க முயற்சிப்பது ஜனநாயகத்தை இன்னொரு திசையில் திருப்பும் செயற்பாடாகும். இதனுடாக நாட்டு மக்களை அடிமைகளாக மாற்றுவதற்கான முயற்சியாகும். இந்நிலையில் நாம் அவதானம் செலுத்த வேண்டியது சுதந்திரமான பிரஜைகளாக வாழ்வதா? அல்லது அடிமைகளாக மாறுவதா? என்பது தொடர்பிலே.

இது ஜனநாயகத்திற்கு எதிரான கடுமையான தாக்குதலாகும் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். சர்வாதிகார போக்கிற்காக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்ற அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக ஜனநாயக அமைப்புகலுடன் இணைந்து செயற்படுவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது.