நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருள், வாள்கள் மற்றும் போலித் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தலங்கம
தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுஹூதிப்புர - பத்தரமுல்லை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள், வாள்கள், இரும்புகள் மற்றும் போலி துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களோடு சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். குறித்த பகுதியில் சனிக்கிழமை மாலை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரிடமிருந்து 4 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபரின் வீட்டைச் சோதனையிட்ட போது 3 வாள்கள், 2 இரும்பு பொல்லுகள் மற்றும் போலி கைத்துப்பாக்கி ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சந்தேகநபர் பாதாள குழுக்களுடன் தொடர்பினைப் பேணிவந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுஹூதிப்புர -பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

களுத்துறை
களுத்துறை - எலமோதர பாலத்திற்கு அருகில் சனிக்கிழமை குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட போதே சந்தேகநபர்களை குற்றத்தடுப்புப் பிரிவினர் மடக்கிப் பிடித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 10 கிராம் 710 ஹெரோயின் மீட்கப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

ஹொரண - தொஓகொட பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 41 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேலியகொடை
பேலியகொடை - துட்டகைமுனு மாவத்தையில் 48 கிராம் 29 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தடுப்புப் பிரிவினர் சனிக்கிழமை முற்பகல் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை - துட்டகைமுனு மாவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரத்மலானை
கல்கிஸ்ஸ - இரத்மலானை பகுதியில் கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 11 கிராமிற்கும் அதிகளவு ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான கெப் ரக வாகனமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போதே குறித்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிராம் 699 மில்லிகிராம்  ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 33 வயது மதிக்கத்தக்க நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து  வருகின்றனர்.

கிராண்ட்பாஸ்
கிராண்ட்பாஸ் - மாதம்பிட்டிய பகுதியில் 5 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குற்றத்தடுப்புப் பிரிவினர் சனிக்கிழமை  இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.