சட்டமா அதிபர் தப்புல டிலிவேரா மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐ.நா. அலுவலகத்தின் இலங்கைத் தலைவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஐ.நா. கடல்சார் நிபுணருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சர்வதேச போதைப்பொருள் மோசடி, பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச் செயல்கள் மற்றும் அது தொடர்பான சட்டரீதியான கவலைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சர்வதேச மோசடிகளால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டதாகவும், பிராந்தியத்தை பாதிக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து இரு தரப்பினரும் பயனுள்ள விவாதங்களை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.