ரொபட் அன்டனி

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான  புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளதுடன்  ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய   பாராளுமன்ற  அமர்வும்  கடந்த வியாழக்கிழமை நடந்தேறியது.  அந்த வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் வெற்றிபெற்றுள்ள  ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுன   தனது ஆட்சி நிறுவாகத்தை    ஆரம்பித்திருக்கிறது.    அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யக்கூடிய வகையிலான    அதிகாரத்தையும்   மக்கள் ஆணையையும்     பெற்றுள்ள   ஆளும் கூட்டணி     ஆரம்பத்தில் இருந்தே  நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாகவும்   குறிப்பாக  முக்கியமான சட்டங்களில் மாற்றங்களை செய்யப்போவதாகவும்   மிகவும்  தெளிவான முறையில் அறிவித்து வருகிறது. 

19 ஆவது திருத்த சட்டத்தில்   முழு அளவில் மாற்றம் செய்யப்போவதாக   ஆளும்  தரப்பினர்  தேர்தலுக்கு முன்னரும்  தேர்தலுக்குப் பின்னருமாக  மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்து வருகின்றனர்.   அந்தவகையில் 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு  19 ஆவது திருத்த சட்டம் அகற்றப்படும் என்றும்  19 ஆவது திருத்த சட்டத்தை   அகற்றுவதனால் ஏற்படுகின்ற சட்ட சிக்கல்களுக்கு   20 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக   தீர்வுகள் முன்வைக்கப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 19 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பானது சகலரும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் உருவாக்கப்படும் என்று ஜனாதிபதியும் தனது கொள்கை பிரகடன உரையில் அறிவித்திருக்கின்றார். 

13 ஆம் திருத்தம் 

இவ்வாறான சூழலில்  அரசியலமைப்பில்  13 ஆவது திருத்த சட்டத்தையும்   மாற்றியமைக்கப்போவதாகவும்   அதன்  முக்கிய அதிகாரங்களில் திருத்தங்களை செய்யப்போவதாகவும்   அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள்   தொடர்ச்சியாக தெரிவித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.   இது தொடர்பில்  புதிதாக நியமனம்   பெற்றுள்ள   அரசாங்கத்தின் அமைச்சர்கள்  அவ்வப்போது   பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதை   அவதானிக்க முடிகின்றது.   13 ஆவது திருத்த சட்டம் பயனற்றது என்றும்   அது தோல்வி அடைந்துவிட்ட ஒரு முறைமை என்றும்   அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்து வருகின்றனர். 

இந்த கருத்துக்களைப் பார்க்கும் போது  அரசாங்கம்  எங்கே  13 ஆவது திருத்த சட்டத்தில் கைவைத்துவிடுமா என்ற ஒரு கேள்வி   மக்கள் மத்தியில் எழுகின்றது.   விசேடமாக  இந்த விடயம் தொடர்பில்   தமிழ் பேசும் அரசி யல் பரப்பில்  வெகுவாக பேசப்படுகின்றது.   காரணம்  இது தொடர்பில்  கருத்துக்களை வெளியிடுகின்ற அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள்  அந்த விடயங்களை   திட்டவட்டமாக வெளியிட்டு வருகின்றனர்.   இது குறித்து   அரசாங்கத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கின்ற   வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன  சில முக்கியமான விடயங்களை சில தினங்களுக்கு முன்னர்  கேசரியுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். 

குற்றச்சாட்டு 

அதாவது ’’நாட்டில் மாகாண சபை முறை தோல்வியடைந்துவிட்டது. கடந்த சில வருடங்களாக  நாட்டில் மாகாண சபைகள் இல்லாவிடினும் மக்களுக்கான சேவைகளில் எவ்விதமான குறைபாடும் இருக்கவில்லை.  எனவே    மாகாண சபை முறையானது நாட்டுக்கு பயனற்றதாகும் .  மாகாண சபை முறைக்கு பதிலாக புதிய  செயற்றிறன் மிக்க மக்களுக்கு சேவையாற்றக்கூடிய  முறை  ஒன்று குறித்து  சிந்திக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் விரைவில்    புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ளது. அதன்போது மாகாண சபை முறைக்கு பதிலாக சிறந்த பயனுள்ள முறை ஒன்றை கொண்டுவரலாமா என்பது குறித்து ஒருவேளை ஆராயப்படலாம். அவை  தொடர்பில் தற்போது எதனையும் கூற முடியாது.   ஆனால் மாகாண சபை முறை தோல்வியடைந்துவிட்டது. மாகாண சபை முறை வருவதற்கு முன்னர் இலங்கை கல்வி மற்றும் சுகாதார துறையில் ஆசியாவி்ல் முன்னனியில் இருந்தது. ஆனால் மாகாண சபை முறை வந்ததன் பின்னர்  பின்னடைவுக்கு சென்றுவிட்டது. காரணம் மாகாண சபை முறையில் காணப்படும்   பலவீனமான முகாமைத்துவமாகும்’’ 

இவ்வாறு  வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன  குற்றச்சாட்டுக்களுடன் கூடிய விதத்தில்   இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். முக்கியமாக  மாகாணசபை ஊடாக    கல்வி மற்றும்  சுகாதார   விடயதானங்கள் மாகாணசபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.   எனினும் அவ்வாறு   விடயதானங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமையினால்   அந்த துறைகளில் நாடு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக   வெளிவிவகார அமைச்சர் குற்றம் சாட்டுகிறார்.  அதேபோன்று   எமது நிர்வாக வசதிக்கேற்ப  சில விடயங்களில் மாற்றங்களை செய்யும் போது   அது தொடர்பில் வேறு நாடுகள்   சிக்கல் அடையவேண்டியதில்லை. என்ற   ஒரு கருத்தையும் வெளிவிவகார அமைச்சர் முன்வைக்கிறார்.  இதன் மூலம்   வெளிவிவகார  அமைச்சர் இந்தியாவை பிரஸ்தாபிக்கின்றமை தெளிவாகின்றது.   

உறுதியான நிலைப்பாட்டில் சுதந்திரக் கட்சி  

இது இவ்வாறிருக்க  அரசாங்கத்தில்   இராஜாங்க அமைச்சுப் பதவியை வகிப்பவரும்   சிறிலங்கா  சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளருமான   தயாசிறி ஜயசேகர  இலகுவில் 13  ஆவது திருத்த சட்டத்தில் மாற்றங்களை செய்ய முடியாது என்ற கருத்தை  வெளியிட்டிருக்கிறார்.   அந்தவகையில்   

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த விடயத்தில்  யாரும் தாம் நினைத்ததைப்போன்று செயற்பட முடியாது.  அது  இந்தியாவுடன் இணைந்து கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தமாகும்.  எனவே அதில் மாற்றம்   அல்லது திருத்தம் செய்யவேண்டுமானால்   இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.   19 ஆவது திருத்தத்தை அகற்ற முடியும் என்பது போன்று  13 ஆவது திருத்தத்தில் கைவைத்துவிட முடியாது.   அது அவ்வளவு இலகுவில் செய்யக்கூடிய விடயமல்ல.  இது இவ்வாறிருக்க 13 ஆவது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என்பதே  சிறிலங்கா  கட்சியின் நீடித்த நிலைப்பாடாகும்.  அதில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.    13 ஆவது திருத்தம் என்பது எம்மீது திணிக்கப்பட்ட ஒன்றாகும்.   அது  எமது விருப்பத்திற்கு அப்பால் கொண்டுவரப்பட்டு திணிக்கப்பட்டது.  எவ்வாறெனினும் அந்த திருத்தம் மற்றுமொரு நாட்டுடன் சம்பந்தப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.  எனவே  அதனை இலகுவில் மாற்றிவிட முடியாது’’   என்று தெரிவித்திருக்கிறார். 

அந்தவகையில் சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர்   13 ஆவது திருத்த சட்ட விடயத்தில் சாதக ரீதியிலேயே சிந்திப்பது தெளிவாகின்றது.  அத்துடன்  இந்த  சட்டம் சர்வதேச  ஒப்பந்தத்துடன்  உருவாக்கப்பட்டதால் அதில் கைவைப்பது இலகுவானதல்ல.    இந்தக்கருத்தையும்  தயாசிறி  ஜயசேகர பதிவு செய்கிறார். 

எனினும் அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள்   இது தொடர்பில்   மிகவும் திட்டவட்டமாக  அழுத்தம் திருத்தத்துடன்  கருத்துக்களை  தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றமையை   அவதானிக்க முடிகின்றது.  முக்கியமாக   அமைச்சரவை அமைச்சர் கெஹெலியரம்புக்வெல்ல   மற்றும்  இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர   உள்ளிட்டவர்கள்   அந்த மாகாணசபை முறைமையில்  மாற்றம் செய்யவேண்டும் என்பதில்   மிகவும் உறுதியாக இருக்கின்றமையை  புரிந்துகொள்ள முடிகின்றது. 

 என்ன நடக்கும்? 

இந்நிலையில்  இந்த மாகாணசபை முறையில்  இலகுவில் கைவைக்க முடியுமா என்பது   உண்மையில் கேள்விக்குறிதான்.  காரணம்   இலங்கையின் அரசியலமைப்பில் செய்யப்பட்ட   ஏனைய 18 அரசியலமைப்பு திருத்தங்களை  விடவும்   இந்த 13  ஆவது திருத்த சட்டம்   தனித்துவமிக்கதாகும்.  முக்கியமாக   இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்ட   இரண்டு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் ஊடாக   இலங்கையின் அரசியலமைப்பில் செய்யப்பட்டதே  இந்த திருத்த சட்டமாகும். 

எனவே   இதில் திருத்தம் செய்யவேண்டமானால்  எவ்வாறான நடைமுறைகள்   பின்பற்றப்படவேண்டும்  என்பது தொடர்பில்   பார்க்கப்படவேண்டும்.  மாகாண சபை எவ்வாறு உருவாகியது 

எவ்வாறு 13 வந்தது? 

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 1987 ஆம் ஆண்டு   இந்தியாவின் தலையீட்டுடன்  கொண்டுவரப்பட்டது.  இலங்கையும் இந்தியாவும் ஒரு சர்வதேச உடன்படிக்கையில்   1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திட்டதன் பிரகாரம்  அதன்படி 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி   அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.  1988  ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில்   வடக்கு, கிழக்கு உட்பட   ஒன்பது மாகாண சபைகள் இலங்கையில் உருவாக்கப்பட்டன.  ஒவ்வொரு மாகாண  சபைக்கும்   அந்த மாகாணத்தின்  பூகோள பரப்பளவு மற்றும்  சனத்தொகைக்கு ஏற்ப பிரதிநிதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.  மாகாணசபகளுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற  தேர்தலில்   பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.  (கடந்த மூன்று வருடங்களாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளது)  வடமாகாண சபைக்கு   38 உறுப்பினர்களும் கிழக்கு மாகாணத்தில் 37 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படுகின்றனர்.  33 மூன்று உறுப்பினர்களுடன் மிக குறைந்த எண்ணிக்கையான உறுப்பினர்களுடன் வடமத்திய மாகாணசபை காணப்படுகின்றது.   மேல் மாகாணத்திலேயே   அதிக எண்ணிக்கையான 104 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.  

விவசாயம்,  கல்வி,  சுகாதாரம்,  வீடமைப்புத்திட்டம்,  உள்ளூராட்சி,  போக்குவரத்து,  சமூக சேவை போன்ற விடயங்கள் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.    மாகாண சபைகளுக்கென   பொலிஸ், மற்றும் காணி அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. 32 வருடங்கள் கடந்து விட்ட போதிலும்  இதுவரை  பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் சபைகளுக்கு வழங்கப்படவில்லை.   கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற பல விடயதானங்கள்  மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளபோதிலும் கூட    இந்த மாகாணசபை முறைமையில்   ஒத்திசைவு  பட்டியல்  என்ற ஒரு பட்டியல் காணப்படுகின்றது.   அந்த ஒத்திசைவு பட்டியலின் ஊடாக   சில விடயங்களை   மாகாண சபையும் முன்னெடுக்கவேண்டும்    மத்திய அரசாங்கமும் முன்னெடுக்கவேண்டும் என ஏற்பாடுகள்  கூறுகின்றன.   கல்வி சுகாதாரம் போன்ற விடயங்கள் இந்த ஒத்திசைவு பட்டியலில் உள்வருகின்றன.  

என்ன மாற்றம் வரும்?

இந்நிலையில்  13 ஆவது திருத்த சட்டத்தில்  அரசாங்கம் எவ்வாறான மாற்றங்களை செய்கின்றது    என்பது தொடர்பில் தமிழ் பேசும்   மக்கள் இது தொடர்பில் ஆராயத் தொடங்கியிருக்கியிருக்கின்றனர்.   எனவே சிறுபான்மை அரசியல் கட்சிகளின்  பிரதிநிதிகள்  இது தொடர்பில்    சிந்திக்கவேண்டியது மிகவும்  அவசியமாகும்.     

குறிப்பாக  ஆளும் கட்சியில்  உள்ளடங்கியுள்ள   ஈழமக்கள் ஜனநாயக கட்சியும்   13 ஆவது திருத்த சட்டத்தை ஆதரிக்கின்றது.    இந்த 13 ஆவது திருத்த சட்டத்திலிருந்து  இனப்பிரச்சினைக்கான  தீர்வை  நோக்கிப் பயணிக்கலாம் என்பது அக்கட்சியின்  நிலைப்பாடாகும்.  மேலும்  13 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக  வடக்கு, கிழக்கு  தமிழ்  பேசும்  மக்களின்  அரசியல் அபிலாஷைகள்  இதுவரை  நிறைவேற்றப்படாவிடினும் கூட   மாகாணசபை  முறை நாட்டில்  இருக்கவேண்டும் என்பதில் அனைத்து தமிழ் கட்சிகளும்   உறுதியாக இருக்கின்றன.  பிள்ளையான்  தலைமையிலான  தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும்   13 ஆவது திருத்தச் சட்டம் பலப்படுத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதை அவரது கன்னி பாராளுமன்ற அமர்வு உரையில் அவதானிக்க முடிந்தது. 

13 அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுமா?  

எப்படியும் இந்த 13 ஆவது திருத்தத்தை  வடக்கு, கிழக்கு மக்கள்  தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாவிடினும் கூட  தீர்வுத்திட்டத்தின்  ஒரு ஆரம்பமாக இதனை   கருத முடியும்.  

எனவே  இந்த விடயம்  தொடர்பில்   எதிர்வரும் காலங்களில்   எவ்வாறு  நடவடிக்கை  முன்னெடுக்கப்படப்போகின்றது  என்பது மிகவும்  தீர்க்கமாக  அமையப்போகின்றன.  அரசாங்கம்   புதிய அரசியலமைப்பை  கொண்டுவரவுள்ளதாக  அறிவித்திருக்கிறது.  எனினும் இதன் போது  13 ஆவது திருத்த சட்டத்திற்கு பதிலாக புதிய தொரு திருத்த  சட்டம் கொண்டுவரப்பட்டுவிடுமா   என்பது தொடர்பிலும் விவாதிக்கப்படுகின்றது.  ஆனால்  அரசாங்கம்  இந்தியாவுடன்  நெருங்கிய நட்புறவான தொடர்பை மேற்கொள்ள  விரும்புவதால்  13ஆவது  திருத்த சட்டத்தில்  கைவைக்காது   என்றே கருதப்படுகின்றது.  எனினும்  பொலிஸ்  மற்றும் காணி அதிகாரங்கள் மாகாணங்சபைகளுக்கு  வழங்கப்படாது என்பது  தெளிவாகின்றது.  இதனை  கடந்த வரும்  இந்தியாவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ   இந்திய பிரதமர்  நரேந்திர மோடியின்  அருகில் இருந்தே சுட்டிக்காட்டியிருந்தார்.  எனவே  13  ஆவது திருத்தசட்டத்தில்  உள்ள  பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள்  வழங்கப்படாது எனவும்   தற்போதைய முறையில்  மாகாணசபை  நீடிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

காரணம்  அரசாங்கம் எந்தவொரு வகையிலும்  பிராந்திய  வல்லரசு எனக் கருதப்படும்  இந்தியாவுடன்  முரண்படாது  . அண்மையில்  இது தொடர்பில் கருத்து   வெளியிட்டிருந்த    வடக்கின் மூத்த அரசியல்வாதி சிறிகாந்தா   13 ஆவது  திருத்த சட்டத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு காணப்படுவதாக தெரிவித்ததுடன்  இதனை இந்தியாவிடம்  இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள்   வலியுறுத்த வேண்டும் என்றும்  சுட்டிக்காட்டியிருந்தார்.  எனினும் கடந்த மூன்று வருடங்களாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் இருக்கின்றமை பாரியதொரு தவறாகும். இது ஜனநாயகக் கட்டமைப்பையே கேள்விக்குட்படுத்துகிறது.   தேர்தல் தாமதமடைய காரணமானவர்கள் அதற்கு பொறுப்புக்கூறியாகவேண்டும்.  

இன்னும் சில மாதங்களில்  புதிய அரசியலமைப்பு வரவுள்ள நிலையில்  என்ன நடக்கப்போகின்றது என்பதை  பொறுத்திருந்து பார்ப்போம்.