(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இத்தாலி மற்றும் பிரன்ச் மொழிகளிலும் பேசுவதற்கு  தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க பிரகடனம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடிவேல் சுரேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமென யாரும் நினைத்தால் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான மலையக மக்களை யாரும் மறந்து விட முடியாது.

சிலோன் டீ என்ற பெயருக்கு காரணமானவர்கள் மலையக மக்களே. எனினும்  200 வருட காலமாக மலையக மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இன்னும் அவர்களுக்காக வீடுகள் , பாதைகள் முறையாக  அமைக்கப்படவில்லை. அதேவேளை அடாவடி நிர்வாகங்களினால் இன்னும் மலையக மக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். இவர்கள் என்றுமே தனிநாடு என்று கதைத்தது கிடையாது. தமது உரிமை மற்றும் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை கேட்கின்றனர். இதற்காகதான் அவர்கள் போராடுகின்றனர். ஆனால் அவர்களுக்கான 1000 ரூபா சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கின்றது. ரணில் அரசாங்கமும் சரி தற்போதைய அரசாங்கமும் சரி வழங்கிய வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. அவர்களுக்கு அந்த சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் பின்னடைவாக இருந்தாலும் மலையக மக்கள் கல்வியில் உயர்வடைந்துள்ளதுடன் அரச தொழில்களிலும் இருக்கின்றனர். அதேபோன்று அவர்களுக்காக பேசுவதற்கு பாராளுமன்றம் , மாகாண சபைகளில் உறுப்பினர்கள் இருக்கின்றனர். மலையக மக்களுக்காக அனைத்து மொழிகளிலும் பேசுவதற்காக நாங்கள் பாராளுமன்றத்தில் இருக்கின்றோம்.  அது தமிழாக இருக்காலம் , சிங்களமாக இருக்கலாம் , ஆங்கிலமாக இருக்கலாம்  , பிரன்ச் மொழியாக இருக்கலாம் இத்தாலி மொழியாக இருக்கலாம். இந்த 5 மொழியிலும் என்னுடைய தொப்புள் கொடி உறவுகளான மலையக மக்களுக்காக செயலாற்றுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்றார்.