Published by T. Saranya on 2020-08-22 10:25:59
கடந்த காலத்தில் சமூக பொருளாதார கலாசார மற்றும் தேசிய பாதுகாப்பு ரீதியில் மிகவும் பலவீனப்பட்டுப் போயிருந்த எமது நாட்டினை அனைத்துத் துறைகளிலுமாகக் கட்டியெழுப்புவதற்கான சிறந்ததொரு வாய்ப்பு இப்போது உருவாகியிருக்கின்றது என்பதை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.
9 வது நாடாளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் இன்று (21.08.2020) நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் - அதிகளவிலான வீழ்ச்சி நிலையை நோக்கிப் போயிருந்த எமது பொருளாதார நிலைமையானது அண்மைக்காலமாக தொடர்கின்ற உலகளாவிய கொரோனா தொற்று அனர்த்தம் காரணமாக மேலும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்திருந்தாலும் அந்த பாதிப்புகளை எமது மக்களை உணரவிடாத வகையில் பாதுகாத்தும் கொரோனா அனர்த்தம் அதிகளவில் நாட்டில் பரவவிடாது தடுத்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமையானது நாட்டின் தலைமைமீது மக்கள் அதிகளவிலான நம்பிக்கை கொள்ள வழியேற்படுத்தி உள்ளதையே அண்மைய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
அந்தவகையில் எமது நாட்டுக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களது சிறந்த தூர நோக்கு கொண்ட மனிதாபிமானமான தலைமைத்துவம் நாட்டை வளர்ச்சி நோக்கி முன்னெடுப்பதில் எப்போதும் கடுமையாக உழைக்கின்ற கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களது வழிகாட்டல்கள் இவற்றோடு பின்னணியில் இருந்தாலும் முன்னணி வகித்து சிறந்த திட்டங்களை நாட்டின் எதிர்காலம் தொடர்பில் வகுத்துக் கொண்டிருக்கும் கௌரவ பசில் ராஜபக்ச அவர்களது உழைப்பு எல்லாம் இணைந்து நிச்சயமாக இந்த நாட்டை பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் குறுகிய காலத்தில் முன்னேற்றமடைய செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் தனது கொள்கைப் பிரகடன உரையிலே இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பில் அனைத்துத் துறைகள் சார்ந்தும் முற்போக்கான திட்டங்களை வகுத்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் உணர்த்தியிருந்தார்.
குடும்ப பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வது முதற்கொண்டு இந்த நாட்டு மக்களால் அந்நியச் செலாவணியை நாட்டுக்கு ஈட்டித் தரக்கூடிய நிலைமை வரையில் சகல துறைகளையும் முன்னேற்றும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களது வினைத்திறன்மிக்க நோக்கு இந்த நாட்டை நேசிக்கின்ற அனைவராலும் வரவேற்கத்தக்கதாகும்.
குறிப்பாக வறுமை நிலைக் கொண்ட குடும்பங்களின் இளைஞர் யுவதிகளுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு முன்னுரிமை 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு என்பன மிகவும் வரவேற்கத்தக்கன என்றார்.