வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் இருந்த சுமார் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவு குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளையும் பொருட்களின் விபரங்களையும் சபைக்கு அறிவிக்குமாறு தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கோரிய நிலையில் இதுவரைக்கும் அவை வெளியிடப்படாமைக்குக் கண்டனம் தெரிவித்து சபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததுடன் சபைக்கூட்டமும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் மூன்று மாதத்திற்கு முன்னர் ஒரு சனிக்கிழமை பொருட்களுக்கு பொறுப்பானவர் இல்லாத நிலையில் பிரதேச சபையின் பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் அன்றைய தினம் கண்காணிப்புக் கமெராவில் இருந்த அத்தனை பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்காணிப்புக் கமெராவுக்குரிய பதிவேற்றும் கருவிகள் செயலாளரின் கண்காணிப்பின் கீழ்தான் இருந்துள்ளது. இத்தகைய நிலையில் குறித்த விடையம் தொடர்பில் எத்தகைய பொருட்கள் எந்த நேரத்தில் யாரால் களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறும் அதன் விபரங்களை சபைக்கு சமர்ப்பிக்குமாறும் சபை செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் சபைக்கூட்டங்கள் மூன்று இடம்பெற்றுள்ள நிலையிலும் செயலாளரினாலோ நிர்வாகத்தினராலோ விசாரணையோ அறிக்கையே சமர்ப்பிக்கப்படவில்லை. இவற்றை வெளிப்படுத்தாத நிலையில் நேற்று காலை மாதாந்த சபை அமர்வு இடம்பெற்றபோது உறுப்பினர்களினால் குறித்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது உரிய பதில் கிடைக்காமையினால் அனைத்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்த தவிசாளர் சபையை கால வரையறையின்றி ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தவிசாளர் ஜெபநேசன் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முன் மாதிரியான சபையாக எமது சபையை முன்கொண்டுவருகின்றபோது களவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் செயலாளர் மற்றும் நிர்வாகத்தினர் பொறுப்புக்கூறவேண்டும். நாங்கள் பல தடவை இது தொடர்பில் கேட்டபோது உரிய பதில்களோ விசாரணைகளோ நடத்தப்படாதுள்ளது.

பொறுப்புக்கூறவேண்டியஅரச அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவது ஏன் என்பதே எம்முன்னுள்ள கேள்வியாகும் என்றார்.