புத்தளம் கல்லடி பிரதேசத்தில் ஹெரோயின், மாவா மற்றும் ஒருதொகை பணம் என்பவற்றுடன் நேற்று வியாழக்கிழமை (20) ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் கல்லடி மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான 4 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மாவா , இரண்டு புகையிலை பக்கெட்டுகள் , 60 ஆயிரம் ரூபா பணம் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட  மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.