நாட்டின் இன ஐக்கியத்தில், ஒற்றுமையில் கடத்த காலத்தில் பல தவறுகள் விடப்பட்டது. யானையின் சின்னத்தை கொண்ட ஐக்கிய தேசிய கட்சி செய்த அதே பிழையான பாதையில் இந்த அரசாங்கமும் பயணிக்குமாயின் இன்று  ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட  நிலைமையே எதிர்காலத்தில் அரசாங்கமும் சந்திக்க நேரிடும்.  

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அவர்களின் தேசம் என்ற அடிப்படையில்  சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள், அவர்களின் உள்ளார்ந்த உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வரலாறு பற்றிய தவறான கண்ணோட்டங்கள் களையப்பட்டால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் இந்த நாட்டில் உதயமாகும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

9 ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வுகள் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய பின்னர் புதிய சபாநாயகராக மஹிந்த  யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கான  வாழ்த்து தெரிவித்த போதே விக்னேஸ்வரன் எம்.பி இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,  

உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும், இலங்கையின் முதல் பூர்வீக குடிமக்களின் மொழி தமிழ் மொழியாகும்,  அந்த தமிழ் மொழியில் எனது  உரையை ஆரம்பிக்கின்றேன். புதிய சபாநாயகராக நீங்கள் தெரிவானமைக்காக  தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எமது பாராளுமன்ற பாரம்பரியத்தின் மிக உயர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளமைக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.  

அதேபோல்  இன்றைய அரசாங்கம் மிகவும் பலமான நிலையில் இருக்கிறது,  எனினும் முன்னைய அரசாங்கம் மறைந்த ஜே. ஆர். ஜெயவர்தனவின் கீழ் யானைப் பலத்துடன் 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. அவர்களின் ஆட்சியில் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்தது. அவ்வாறு முன்னெடுத்த கட்சியினர் இன்று  ஒரே ஒரு பாராளுமன்ற  உறுப்பினரை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளனர். அவரும் இன்றி இல்லை.  கடந்தகால தவறுகளை அவர்களை திருத்திக்கொள்ளாததன் விளைவுகளே இதுவாகும். எனினும் யானையின் அதே பிழையான பாதையில் இந்த அரசாங்கமும் பயணிக்குமாயின் இன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் நிலைமையே எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.  

 ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் நாம் விட்ட பிழைகளில் இருந்து நல்லதொரு படிப்பிடனையை கற்றுக்கொண்டு சகல சமூகங்களும் ஒருவருக்கு ஒருவர் மதிப்புடனும் சமனாகவும் உணருகின்ற வகையிலும்  இலங்கை தாய் நாட்டின் பிள்ளைகள் நாம் என்ற இறைமையுடனும் பெருமையுடனும் நடைபோடும் வகையிலுமான  சமாதானமும் செழிப்பும் மிக்க ஒரு காலத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன். 

குறிப்பாக குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையுடன் மரபு, பாரம்பரிய  உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக்கப்படுவதன் பிரகாரம் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடைய வடக்கு கிழக்கில் வாழும்  தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை  அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்று கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும்.

பௌத்த மதத்தை பின்பற்றும் ஒரு நாட்டிலே, மேலாதிக்க அதிகார பிரயோகத்தை நாங்கள் எவரிடம் இருந்தும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும் என்பதற்காக பின்வரும் பழமொழியை கூறுவார்கள் என்பது எமக்கு  தெரியும். அதாவது, (கல கல தே  பல பல வே) முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் எனத் தெரிவித்தார்.