சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி விடுத்த அறிவிப்பை தொடர்ந்து பல பிரபலங்களும் அவரது பணியை பராட்டிவருவதுடன் ரசிகர்கள் தமது வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தோனியை வாழ்த்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் புதிய இந்தியாவின் அடையாளங்களில் ஒருவர். சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்ற தகவலை கேட்டதும் ஏமாற்றம் அடைந்தேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான தலைவர்களில் தோனியும் ஒருவர். உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்டவீரர், அணித்தலைவர், விக்கெட் காப்பாளர் என்று வரலாறு தோனியை பெருமைப்படுத்தும்.
2011 உலக கிண்ண இறுதிப்போட்டியில் ஆறு ஓட்டங்களை அடித்து இந்தியாவிற்கு கிண்ணத்தை தோனி வென்று கொடுத்ததை மறக்கவே முடியாது.
வெறும் கிரிக்கெட் வீரராக மட்டுமே தோனியை சுருக்கிவிட முடியாது, பல கோடி இளைஞர்களுக்கு தோனி உத்வேகம். இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்தவர் தோனி.
சக வீரர்கள் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தபோது தோனி தனது குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த புகைப்படம் என் மனம் கவர்ந்தது என கூறி உள்ளார்.



