(எம்.மனோசித்ரா)

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாரு காரணமாக கடந்த நான்கு நாட்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த மின் விநியோகத்தடை நாளை முதல் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாரினால் அன்றைய தினம் நாடு முழுவதும் பல மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது.

அத்தோடு அதன் பின்னர் அடுத்த நான்கு நாட்களுக்கு கட்டம் கட்டமாக தினமும் ஒரு மணித்திலாயம் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அந்த நடைமுறை நாளையுடன் நிறைவுக்கு வருகிறது.

இதே வேளை கடந்த திங்களன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின் வெட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கெரவலப்பிட்டி உப மின் உற்பத்தி நிலையம் மற்றும் நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையம் ஆகியவற்றுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளை நேரில் சென்று நிலைவரங்களை ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.