கன்னி அமர்வில் புதிய அரசியல் அமைப்பொன்றின் தேவையை வலியுறுத்திய சிலர்!

20 Aug, 2020 | 08:20 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இன்று கூடிய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சம்பிரதாய நிகழ்வுகளின் போது சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டார். அவரது தெரிவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வாழ்த்துச்செய்தியில் புதிய அரசியல் அமைப்பிற்கான தேவையையும் வலியுறுத்தியிருந்தனர். அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் கூறுகையில்,

ரிஷாத் பதியுதீன்

அமைச்சரவையின் கன்னி அமர்வில், தற்போதைய அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர முடிவெடுத்து, அதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. காலத்துக்குக் காலம் அதிகாரத்துக்கு வருகின்ற அரசாங்கங்கள், அரசியலமைப்பில் மாற்றங்களை செய்துள்ளன. அதேபோன்று, இனிவரும் காலங்களிலும் பதவிக்கு வரும் அரசாங்கங்களும் இன்னொரு மாற்றத்தை மேற்கொள்ளாத வகையில், இந்த அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். 

உத்தேச அரசியலமைப்பு வெறுமனே, ஒரு சாராரையோ, ஒரு கட்சியையோ, ஒருசில இனவாதிகளையோ திருப்திப்படுத்துவதற்கு என்றில்லாமல், நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களையும் குறிப்பாக, பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமின்றி, எல்லோருக்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில் அமைய வேண்டும். அத்துடன், அவர்களது உரிமைகளை மதிக்கக் கூடிய வகையிலும் அது இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, இந்நாட்டில் ஒரு நிலையான சமாதானத்தை எதிர்பார்க்க முடியும்.

சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட போது, பொருளாதாரத்தில் பலமடைந்திருந்த நமது நாடு பின்னர், காலப்போக்கில் இங்கு வாழ்ந்த ஓர் இனம் “தமக்கு தனி நாடு வேண்டும்” என்று போராடிய வரலாறு இருந்தது. அதன்மூலம், நாட்டின் பொருளாதாரம் அழிந்ததுடன் இலட்சக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன என்பதையும் மனதில்கொள்ள வேண்டும். அரசியலுக்காக, தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை உசுப்பேற்றும் அரசியல் கலாசாரத்தைக் கொண்ட கட்சிகளாக நாம் இருக்கின்றோம். எனவே, அரசியலமைப்பு மாற்றம் நிரந்தரமான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம்

சபாநாயகர் அவர்களே, நீங்கள் இன்று ஏகமனதாக தெரிவானதை அடுத்து இந்த சபைக்கு மாத்திரம் அல்லாது அரசியல் அமைப்பு சபைக்கும் நீங்கள் தலைவராக நியமனம் பெறுகின்றீர்கள். அவ்வாறான நிலையில் தற்போதைய தேவைகளை, எதிர்பார்ப்பை மற்றும் சுயாதீன ஆணைக்குழு நியமனங்களில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.

ஏ.எல்.எம் அதாவுல்லா

இந்த நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பொன்று  வேண்டும் என்பதே எம் அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. நாட்டில் இன, மத முரண்பாடுகள் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் அரசியல் அமைப்பொன்றை  உருவாக்கிக்கொள்ள இந்த பாராளுமன்றத்தை அரசியல் அமைப்பு சபையாக மாற்றியமைத்து விரைவில் நாட்டிற்கு ஏற்ற நல்லதொரு அரசியல் அமைப்பினை முன்வைக்க வேண்டும். எந்தவொரு நாட்டின் தலையீடுகளும் இல்லாத, நாட்டில் குழப்பங்கள் வராத செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

பிள்ளையான்

மாகாண சபை ஆட்சியில் கிழக்கு மாகாண சபையில் மக்கள் மீது நம்பிக்கையை கட்டியெழுப்பி 13 ஆவது திருத்தத்தை முடிந்தளவுக்கு காப்பாற்றியுள்ளோம். அதையும் இல்லாமல் செய்து இந்த மாகாண சபை முறைமை அழிந்து போகும் சூழ்நிலையில் இப்படியெல்லாம்  நாட்டை  கொண்டு செல்ல முடியாது. எனவே 13 ஆம் திருத்த சட்டத்தை பலப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right