பெண்கள் கருவுற்றிருக்கும் காலகட்டத்தில், ஏற்படும் இரத்த அழுத்தத்தால் அவர்களுடைய மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவது அதிகரிப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள்.

பொதுவாக பெண்கள் கருவுற்றிருக்கும் காலங்களில் அவர்களுடைய இரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும். அதேபோல் அவர்களுடைய இரத்த சர்க்கரையின் அளவிலும் மாறுபாடு உண்டாகும். பெரும்பாலானவர்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் இந்த இரத்த அழுத்த மாறுபாடு மற்றும் ரத்த சர்க்கரை அளவு வேறுபாடு மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்பும். 

ஆனால் சிலருக்கு இரத்த அழுத்த பாதிப்பு, பிரசவத்திற்கு பின்னரும் நாட்பட்ட இரத்த அழுத்த பாதிப்பாக மாறுவதாகவும், ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, டைப்-2 நீரிழிவு நோயாளிகளாக மாறுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பேறுகாலத்தின் போது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் அவர்களுக்கு இதய இரத்த நாளத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, உயிரிழக்கும் வாய்ப்பு உண்டாகும். 

வேறு சில பெண்களுக்கு இந்த இரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்றால் அவர்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது அதிகமான உதிரப்போக்கு ஏற்படும் என்றும், மாதவிடாய் சுழற்சி சீரற்றதன்மையில் இருக்கும் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பேறுகாலத்தின் போது பிரக்டோஸ் எனப்படும் இனிப்பு சுவை மிகுந்த பழங்களை அதிகம் சாப்பிடுவதாலும், பிரக்டோஸ் மிகுந்திருக்கும் தேன், உலர் பழங்கள், சாலட் , பக்கற்றுகளில் அடைக்கப்பட்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகள், பழச்சாறு, சாஸ், நொறுக்குத்தீனிகள் , கோப்பி உள்ளிட்ட உணவு பொருட்களை இயல்பான அளவைவிட கூடுதலாக சாப்பிட்டால், வளர்சிதை மாற்றத்தில் சமச்சீரின்மை ஏற்பட்டு, இதன் காரணமாகவும் ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

கொரோனாத் தொற்று பரவிவரும் இந்த காலகட்டத்தில் கருவுற்றிருக்கும் பெண்கள் அனைவரும் முழுமையான நம்பிக்கையுடன், மருத்துவர் அறிவுறுத்தும் வழிகாட்டுதலின்படி இயங்கி, இரத்த அழுத்த அளவையும், இரத்த  சர்க்கரையின் அளவையும் சீராக பராமரிக்க வேண்டும்.

-டொக்டர் ஸ்ரீதேவி.