(நா.தனுஜா)
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோருடன் இந்திய உயர்ஸ்தானிகரும் பதில் சீனத்தூதுவரும் சந்திப்புக்களை நடத்தியிருப்பதுடன், இலங்கையுடன் தத்தமது நாடுகளின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடியிருக்கின்றனர்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை அமைச்சர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்த இலங்கைக்கான பதில் சீனத்தூதுவர் ஹு வே, அவர் மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமனம் பெற்றமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 அதேவேளை இச்சந்திப்பின் போது இலங்கை மற்றும் சீன நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகேவுடனும் ஹு வே சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

அதேவேளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவுடன் இன்று புதன்கிழமை சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதன்போது இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையில் பல்துறை சார்ந்த உறவுகளை மேலும் விரிவாக்குவது பற்றி கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் சீனாவுடனான தொடர்புகள் வலுவானதாகக் காணப்பட்ட நிலையில், மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரனான கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் வெளிநாட்டுறவுகளுடன் தொடர்புடைய விவகாரங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

அந்தவகையில் பொதுத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்னதாகவே தொலைபேசி ஊடாக இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்த அதேவேளை, வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட தினேஷ் குணவர்தனவிற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார். அத்துடன் புதிய அரசாங்கத்துடன் நெருங்கிச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.