(எம்.மனோசித்ரா)
அரச திணைக்களங்களில் மோசடியில் ஈடுபடுகின்ற அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மோசடிகளில் ஈடுபடுகின்ற ஒரு சிலரால் ஏனைய அதிகாரிகளது சிறப்பான செயற்பாடுகளுக்கும் சேரு பூசப்படுகிறது என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குனரத்ன தெரிவித்தார்.

காலியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் ,

அரச திணைக்களங்களில் மோசடியில் ஈடுபடுகின்ற அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெருமளவான அரச திணைக்களங்களில் நேர்மையாக ஊழல் மோசடியற்ற அதிகாரிகள் பலர் உள்ளனர். ஆனால் அவர்களுக்கிடையில் ஒரு சில மோசடி அதிகாரிகள் உள்ளனர்.

இந்த குறிப்பிட்டளவு அதிகாரிகள் சிறந்த அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் நேரத்தை ஒதுக்கி செய்து தருகின்ற சிறந்த விடயங்களை சீரழிக்கும் வகையில் செயற்படுகின்றனர். இது மோசடியற்ற அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு சேரும் பூசும் செயற்பாடாகும்.

எனவே எமக்குள்ளும், வெளியிலும் அதாவது திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற குழுக்கள் , போதைப் பொருள் வியாபாரிகள் உள்ளிட்டவர்களையும் இனங்கண்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். எம்முடனேயே இருந்து கொண்டு இவ்வாறு செயற்பட்டால் அது பெரும் தவறாகும்.