(எம்.மனோசித்ரா)

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்படுவதற்கு அல்லது அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டால் கட்சி தலைமைத்துவம் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே சுதந்திர கட்சி இறுதி தீர்மானத்தை  எடுக்கும் என்று மின்உற்பத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

19 ஆம் திருத்தத்தை முழுமையாக நீக்குவதற்கு ஆளுந்தரப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான நிலையில் இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னெடுப்புக்கள் எவ்வாறானதாக அமையும் என்று வினவிய போதே துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆளுந்தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்களே இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் உயர் மட்டத்திலிருந்து இது வரையில் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. எந்த தீர்மானமானாலும் அறிவிப்பு கிடைத்த பின்னரே எடுக்க முடியும்.

இவ்விடயம் பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் ஆதரவளிப்பதாகவோ அல்லது எதிர்ப்பதாகவோ உடனடியாக எதனையும் கூறி விட முடியாது. சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானிக்க முடியும்.

கட்சி தலைமைத்துவம் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கமால் தனிப்பட்ட நிலைப்பாட்டைக் கூற முடியாது. கட்சிக்குள் பேசி அதன் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேசிய பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.