இந்த தலைப்பு தென்னிந்திய திரைப்படத்தை அடி ஒற்றியது. அதாவது ஒரு குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகள் சண்டைகள் என்பவற்றை இந்த திரைப்படம் அழகாக சித்தரிக்கின்றது.

 நாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் மின்தடை இந்த திரைப் படத்தின் தலைப்பையும் பலருக்கு நினைவு படுத்தி யிருக்கலாம்.
நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்சார தடையால் முழு நாடுமே பெரும் நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது. மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானார்கள்.


பிற்பகல் 12.30 மணிக்கு திடீரென தடைப்பட்ட மின்சாரம் மீண்டும் வழமைக்குத் திரும்ப இரவு 8:30  மணியானது.
இதற்கிடையில் நீர் விநியோகம், வீதி சமிக்ஞைகள், மின்சார உயர்த்திகள் என்பன  தடைபட்டதால் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டது.
கொழும்பில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்க நேர்ந்தது. ஒரு சில இடங்களில் மின்பிறப்பாக்கிகளின் உதவியுடன் வழமையான நடவடிக்கைகள் இடம்பெற்றாலும் பெரும்பாலான இடங்கள் இருள் சூழ்ந்தே காணப்பட்டன.

இவற்றுக்கு மத்தியில்  மின்சாரத்தடை மேலும் நீடிக்கும் என்ற புரளியும் கிளப்பி விடப்பட்டிருந்தது. இதனால் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளானார்கள் .


மேலும் நுரைச்சோலை லக் விஜய மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே நாட்டில் மின்சாரத்தடை ஏற்பட்டதாகவும் இதனை சீர்செய்ய நான்கு தொடக்கம் ஐந்து நாட்கள் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாடு முழுவதும் நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு கட்டம்கட்டமாக  மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.  செவ்வாய்க்கிழமை முதல் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய முதல் வலயத்தில் மாலை  6 மணி தொடக்கம் 7 மணி வரையும் , 2 ஆம் வலயத்தில் 7 - 8 மணி வரையும் , 3 ஆம் வலயத்தில் 8 - 9 மணி வரையும் , 4 ஆம் வலயத்தில் 9 - 10 மணி வரையும்  மின் விநியோகம் துண்டிக்கப்படும்.

மின் பிறப்பாக்க கட்டமைப்பில் மின்சார உற்பத்தி வழமைக்கு திரும்பும் வரை நான்கு நாட்களுக்கு மாத்திரம் மின்சார விநியோகத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை  நாடு தழுவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் மூன்று நாட்களுக்குள் முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திடீரென ஏற்படும் நெருக்கடி நிலை மக்களை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கு இந்த மின்சார துண்டிப்பு சிறந்த உதாரணமாகும். ஒரு மெழுகுவர்த்தியை கூட ஏற்ற முடியாத நிலையில் மக்கள்  மிகவும் சிரமப்பட நேர்ந்தது.

 இவை அனைத்துக்குமான காரணம் நெருக்கடி நிலையை எதிர்கொள்ளக் கூடிய நிலையில் மக்கள் தயாராக இல்லாது போனமையே ஆகும். எனவே எந்த ஒரு இக்கட்டான நிலையை எதிர்நோக்க நேர்ந்தாலும் அதற்கு மக்கள் தயாராக இருப்பது மிகவும் அவசியமாகும்

மின்சாரமின்றி ஒருவேளை பொழுதைக் கூட சமாளிக்க முடியாது போனது தெரிந்த விடயமே. இதன் காரணமாகத்தான் சம்சாரம் அது மின்சாரம் என்று தலைப்பிட்டார்களோ தெரியவில்லை.வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்