லெபனான் முன்னாள் பிரதமர் ரபீக் அல்-ஹரியை 2005 இல் பாரிய குண்டு வெடிப்பில் படுகொலை செய்தமைக்காக ஹிஸ்புல்லாவின் உறுப்பினர் ஒருவரை குற்றவாளி என ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதன்படி ஹிஸ்புல்லாவின் உறுப்பினர் சலீம் அய்யாஷ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஈரான் ஆதரவு குழு மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் இந்த தாக்குதலை ஒழுங்கமைத்து நடத்தியதாக முன்னர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் லெபனானுக்கான சிறப்பு நீதிமன்றின் (நெதர்லாந்தின் அமைந்துள்ள ஒரு சர்வதேச நீதிமன்றம்)  நீதிபதிகள், 56 வயதான சலீம் அய்யாஷ் ஒரு பயங்கரவாத செயலைச் செய்ய சதி செய்தல் மற்றும் வெடிக்கும் பொருட்களைப் பயன்படுத்தி முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்தல் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று கூறினார்.

எவ்வாறாயினும், சுமார் ஒரு தசாப்த விசாரணை மற்றும் நீண்ட விசாரணைக்குப் பின்னர், அதே நீதிமன்ற நீதிபதிகள் ஹுசைன் ஒனிசி (வயது 46), அசாத் சப்ரா (வயது 43) மற்றும் ஹசன் மெர்ஹி (வயது 54) ஆகிய மூன்று பிரதிவாதிகளை இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துள்ளது.

'Hezbollah' என்பது லெபனான் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் இயக்கமாகும். இவ்வியக்கம், லெபனானின் அரசியல் கட்சியொன்றாக இருக்கும் அதேவேளை ஆயுதமேந்திய போராளி இயக்கமாகவும் உள்ளது. 1982 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டுவரை தெற்கு லெபனானில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலிய படையினரை எதிர்த்துப்போராடவென உருவானமையும் குறிப்பிடத்தக்கது.