(நா.தனுஜா)
இந்தியாவின் 'அண்மைய நாட்டிற்கு முன்னுரிமை' கொள்கையின் கீழ் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்வதற்காக இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் மிகவும் நெருங்கிச்செயற்படத் தயாராக இருப்பதாகவும் இந்தியா அறிவித்திருக்கிறது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கும் தினேஷ் குணவர்தனவிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் தனது வாழ்த்தைத் தெரிவித்திருப்பதுடன், இந்தியாவின் 'அண்மைய நாட்டிற்கு முன்னுரிமை' கொள்கையின் கீழ் இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்வதற்காக வெளிவிவகார அமைச்சுடன் மிகவும் நெருங்கிச்செயற்படத் தயாராக இருப்பதாகவும் ஜெய்ஷங்கர் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்தன நேற்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அன்றைய தினமே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாங்லே அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
இச்சந்திப்பின்போது இந்திய வெளியுறவு அமைச்சரின் வாழ்த்துக்கடிதத்தையும் தினேஷ் குணவர்தனவிடம் கையளித்த இந்திய உயர்ஸ்தானிகர், இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதில் அண்மைய பொதுத்தேர்தலில் புதிய அரசாங்கம் பெற்றுக்கொண்டிருக்கும் உறுதியான மக்களாணை முக்கிய பங்கை வகிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்பின் போது கொவிட் - 19 பரவலின் பின்னரான காலப்பகுதியில் இருநாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுவதன் அவசியம் குறித்து வலியுறுத்திய அமைச்சர் தினேஷ் குணவர்தன, இருநாடுகளுக்கும் இடையில் வரையறுக்கப்பட்ட வகையில் பயணங்களையும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளையும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை பௌத்த தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதில் ஒத்துழைப்புடன் செயலாற்றுவது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. பௌத்த யாத்திரிகர்கள் பயணஞ்செய்யக்கூடிய விதமாக குஷிநகர் விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்றியமைப்பதற்கு இந்திய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தையும் இதன்போது தினேஷ் குணவர்தன பாராட்டினார். மேலும் இருநாடுகளுக்கும் பொதுவான பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.