கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட எச்.எல்.பிரேமலால் ஜயசேகர ஆகியோர் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி கிடைத்திருப்பதாக பாராளுமன்ற படைக்கலசேவிதர் நரேந்திர பெர்னான்டோ தெரிவித்தார்.

தற்பொழுது தடுப்புக் காவலில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதேநேரம், தற்பொழுது மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எல்.பிரேமலால் ஜயசேகரவுக்கும் 20ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தனக்கு வழங்கப்பட்டுள்ள மரணதண்டனை தீர்ப்புக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்திருப்பதாக பாராளுமன்றத்துக்கு அறிவித்திருப்பதாகவும், இதுபற்றி படைக்கல சேவிதர் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு அறிவித்ததையடுத்து பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.